Friday, March 29, 2024
Home » சுற்றுலா கவர்ச்சி மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும்!

சுற்றுலா கவர்ச்சி மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும்!

- வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க எதிர்பார்ப்பு

by Rizwan Segu Mohideen
September 28, 2023 12:07 pm 0 comment

நாட்டில் சுற்றுலா ஈர்பப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டுமென, சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக வாடகை வாகன (Taxi)சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த போதே பதில் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று (27) சர்வதேச சுற்றுலாத் தினமாகும். சுற்றுலாத்துறை அமைச்சு அதனை சுற்றுலாத் தினத்தை எளிய முறையில் கொண்டாடியதாகவும், இந்நாட்டின் சிறந்த சமையல் கலை நிபுணரான பபிலிஸ் சில்வாவுக்கு ‘ஜய ஸ்ரீ லங்கா’ என்ற பெயரிலான சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அது மிகச்சிறந்த விருதாகும். அவர் கீழ் மட்டத்திலிருந்து கல்கிசை ஹோட்டலொன்றில் பிரதான சமையல் கலை நிபுணர் என்ற அந்தஸ்த்து வரை தன்னை வளர்த்துக்கொண்டுள்ள கதை மிகவும் அற்புதமானது. சுற்றுலாத்துறையில் சமையல் கலை நிபுணர்களை மறந்துவிட முடியாது என்பதால் அவர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை வரவழைக்க முடியும் என எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்த்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து அவர்களை வரவழைப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக எல்ல, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், சில சட்டத்திட்டங்களை தளர்த்த வேண்டும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் செலவுகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தவறும் பட்சத்தில் நாட்டிற்கு வருமானம் கிட்டாது என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளதெனவும், சிலர் செய்யும் தவறான செயற்பாடுகளினால் முழு நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதனால் சுற்றுலாப் பயணிகளிடத்தில் அதிக தொகையை அறவிடும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சுற்றுலாப் பயணிகளில் பிரயாண வசதிக்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அது தொடர்பிலான சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு கஞ்சா உற்பத்திக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும், இரு வாரங்களுக்குள் அதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் ரூபாய்களை ஈட்டுவதாக அன்றி டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கானதாக அமைய வேண்டும் என்றும் அதற்கான அதிகார சபையொன்றின் கீழ் ஏற்றுமதி வலயத்திற்கு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT