வாக்குமூலம் வழங்க தயார்; வழக்கை தள்ளுபடி செய்யவும் | தினகரன்

வாக்குமூலம் வழங்க தயார்; வழக்கை தள்ளுபடி செய்யவும்

 

- பெப். 15 இல் வாக்குமூலம் வழங்க உத்தரவு

- 15 வங்கிக் கணக்கு விபரத்தை பெறவும் அனுமதி

 
ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அவமதிப்பு வழக்கு தொடர்பில் இன்று (31) இடம்பெற்ற விசாரணைகளின்போதே  உச்ச நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியது.
 
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொண்டமை தொடர்பாக, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
தான் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயாராகவுள்ளதால், குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருமாறு வழக்கறிஞர் மூலம், நாமல் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார். 
 
ஆயினும், குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கப்படும் வரை குறித்த வழக்கை நிறைவு செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்ததோடு, இது தொடர்பான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது. 
 
இதேவேளை, முறையற்ற விதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 100 மில்லியன் பணத்தின் மூலம், ஹலேகோப் நிறுவனத்தை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படும் வழக்கு தொடர்பில், நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 5 பேரின், 9 வங்கிகளிலுள்ள 15 கணக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
 
குறித்த விடயம் தொடர்பிலான தங்களது விசாரணைக்கு, அவர்களது வங்கிக் கணக்குகளை பரீட்சிக்க அனுமதி தருமாறு, பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணை பிரிவினர் விடுத்த கோரிக்கையை அடுத்தே, கொழும்பு மேலதிக நீதவான் அருண புத்ததாச அவ்வனுமதியை வழங்கினார்.
 

Add new comment

Or log in with...