சமூக வலூவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நேற்று(30) கம்பஹா மாவட்ட அரச உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். திவுலபிடிய பிரதேச செயலாளரை தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலே இந்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றது. கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 13 பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் கடமையை புறக்கணித்து வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலாளரிடம் பிரதி அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் தவறினால் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
திவுலபிடிய பிரதேசத்தில் சட்டவிரோத மண்அகழ்விற்கு எதிராக அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் பங்குபற்றிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,திவுலபிடிய பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு காரசாரமாக உரையாற்றியிருந்தார்.
அரச அதிகாரி ஒருவரை அச்சுறுத்தும் வகையில் பிரதி அமைச்சர் நடந்ததாக கூறி கம்பஹா மாவட்டத்திலுள்ள திவுலபிடிய அடங்கலான 13 பிரதேச செயலக பிரிவு அரச உத்தியோகஸ்தர்கள் நேற்று(30) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வீதியில் இறங்கி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக கோசம் எழுப்பிய அவர்கள் அரசியல்வாதிகள் ,அரச அதிகாரிகளை அச்சுறுத்துவதை அங்கீகரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டனர். அரச அதிகாரிகள் தவறு செய்தால் சுற்றுநிருபத்திற்கமைய செயற்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.
இந்த போராட்டம் அரசாங்கத்திற்கு எதிரானதல்ல எனவும் அரச உத்தியோகஸ்தர்களின் உரிமைக்காகவே போராடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் செயற்படாததால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
இதே வேளை நிபந்தனை அடிப்படையில் திவுலபிடிய பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோரத்தயாரென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.தமது எல்லை பகுதியில் நடக்கும் விடயங்கள் தனக்கு தெரியாதென அவருக்கு கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர்,தான் பிரதேச செயலாளரை அச்சுறுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சரின் செயலை கண்டித்துள்ள எதிரணி, அரச அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட இடமளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.பிரதேச செயலாளர் தைரியமாக அமைச்சருக்கு பதில் வழங்கியதாகவும் பிரதி அமைச்சரின் செயலை அனுமதிக்க முடியாது எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரிகளை அச்சுறுத்துவதை அரசாங்கம் அனுமதிக்கவில்லை எனவும் இது தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணை நடத்தும் எனவும் அஜித் மான்னப்பெரும(ஜ.தே.க)கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் அரச உத்தியோகஸ்தர்கள் மரத்தில் கட்டப்பட்டது போல இன்று நடக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இதே வேளை இந்த விவகாரம் தொடர்பில் கம்பஹா மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர்கள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகளை ஜனாதிபதி நேற்று சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.
இது தவிர பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் சம்பந்தப்பட்ட தரப்பினரை நேற்று சந்தித்து பேச நடவடிக்ைக எடுத்திருந்தார். பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக
ஷம்ஸ் பாஹிம்
Add new comment