Thursday, March 28, 2024
Home » அசர்பைஜான் கைப்பற்றிய பிராந்தியத்தின் எரிபொருள் கிடங்கில் வெடிப்பு: 20 பேர் பலி

அசர்பைஜான் கைப்பற்றிய பிராந்தியத்தின் எரிபொருள் கிடங்கில் வெடிப்பு: 20 பேர் பலி

ஆர்மேனியர் வெளியேறும் நிலையில் சம்பவம்

by sachintha
September 27, 2023 7:34 am 0 comment

அசர்பைஜானின் நகொர்னோ–கரபக் பிராந்தியத்தில் எரிபொருள் கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த பிராந்தியத்தை அசர்பைஜான் கடந்த வாரம் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள ஆர்மேனிய இனத்தினர் வெளியேறி வரும் நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை இரவு இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் 290 பேர் காயமடைந்திருப்பதாகவும் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பிராந்திய தலைநகரான ஸ்டெபனார்கட்டில் இடம்பெற்ற இந்த வெடிப்புக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.

இந்தப் பிராந்தியத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 13,350 அகதிகள் ஆர்மேனியாவில் அடைக்கலம் பெற்றிருப்பதாக ஆர்மேனிய அரசு குறிப்பிடுகிறது. எனினும் இந்தப் பிராந்தியதில் பெரும்பான்மையாக சுமார் 120,000 ஆர்மேனியர்கள் உள்ளனர். மோதலினால் வீடற்றவர்களாக்கப்பட்டவர்களை நாட்டுக்குள் உள்வாங்கும் திட்டத்தை ஆர்மேனியா அறிவித்த நிலையிலேயே அங்கு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் இன சுத்திகரிப்பு இடம்பெறுவதாக ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷின்யான் எச்சரித்துள்ளார். எனினும் ஆர்மேனியர்களை சமமான பிரஜைகளாக மீள் ஒருங்கிணைப்பு மேற்கொள்ள வேண்டி இருப்பதாக அசர்பைஜான் தெரிவித்துள்ளது.

ஆர்மேனியர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் நகொர்னோ–கரபக் பிராந்தியம் அசர்பைஜானின் அங்கம் என்று சர்வதேசம் அங்கீகரித்தபோதும் அது ஆர்மேனிய பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனினும் அசர்பைஜான் கடந்த வாரம் மேற்கொண்ட அதிரடி இராணுவ நடவடிக்கையை அடுத்து பிரிவினைவாதிகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT