லசந்த படுகொலை; சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை | தினகரன்

லசந்த படுகொலை; சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை

 

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று (24) மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த சமயத்தில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தப் படுகொலையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந் நிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணிநேரம் விசாரணைகளை நடாத்தியிருந்தனர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் நேரடி உத்தரவுகளைப் பெற்று, நீதிக்குப் புறம்பான செயல்களை மேற்கொள்ளும் தனியான குழுவொன்று இராணுவத்தில் இயங்கியது என்பதை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மூலமாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடுகையில்: முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்புச் செயலருமே, லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

போர் தொடர்பாக எமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எனக்கும் இடையில் குரோதம் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அறியவருகிறது.இது தவிர முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்‌ஷவிடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் தெரியவருகிறது. 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...