Thursday, March 28, 2024
Home » நிந்தவூர் கடலரிப்பை கட்டுப்படுத்த இரண்டாம் கட்ட நடவடிக்கை

நிந்தவூர் கடலரிப்பை கட்டுப்படுத்த இரண்டாம் கட்ட நடவடிக்கை

by sachintha
September 27, 2023 3:20 pm 0 comment

பிரதேசசபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் சுலைமான் முயற்சியினால் பலன்

நிந்தவூர் பிரதேசத்தில் பல வருடங்களாக இடம்பெற்றுவரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதிதவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வையின் முயற்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. இதன் இரண்டாம் கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது விடயம் சம்பந்தமாக அண்மையில் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆர்.ஏ.எஸ். ரணவக்கவை அமைச்சில் வைத்து சுலைமாலெவ்வை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் பலனாக இரண்டாம் கட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஒருகோடி எழுபது இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியா சென்றுள்ள பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.எஸ். ரணவக்க நாடு திரும்பியதும், இதன் அடுத்த கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்பிரதேசம் கடல் அரிப்பினால் முற்றாகப் பாதிக்கப்பட்டு வருவதுடன், பல்வேறு இழப்புக்களையும் இதன் மூலம் இப்பிரதேச மக்கள் சந்தித்து வருகின்றனர். அத்துடன் நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேச இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்கள் கடல் அரிப்பினால் அள்ளுண்டு சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையிலேயே நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பினைக் கட்டுப்படுத்தும் இரண்டாம் கட்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இது தவிர நிந்தவூர் ஜேர்மன் பாடசாலையின் பின்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிராமிய பாலத்தின் இரண்டாம்கட்ட நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னாள் பிரதிதவிசாளர் சுலைமாலெவ்வை மேற்கொண்டுள்ளார். இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், இது பற்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரக்கோனை அவரது அலுவலகத்தில் சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த பலமானது நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேச மாணவர்கள் கல்வி பயிலும் ஜேர்மன் நட்புறவுப் பாடசாலைக்குச் செல்லும் வீதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT