நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; இருவர் பலி | தினகரன்


நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; இருவர் பலி

 

மூவர் கவலைக்கிடம்

 
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பட்டலிய கஜுகம பிரதேசத்தில் இன்று (23) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 
அநுராதபுரம் நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்றும், மா ஏற்றி வந்த கொள்கலன் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து வந்த கார் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் குறித்த விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன.
 
 
இவ்விபத்தில் 35 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு, அவர்கள் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
 
 
கெக்கிராவ டிப்போவுக்குரிய இ.போ.ச. பஸ், பயணிகளை ஏற்றியவாறு கொழும்பிலிருந்து இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் எதிர்த் திசையில் மா ஏற்றி வந்த கன்டைனர் (கொள்கலன்) லொறியுடன் நேருக்கு நேர் மோதியதை அடுத்து, குறித்த பஸ் புரண்டுள்ளது.
 
 
இதன்போது அதன் அருகில் இருந்த லொறியின் தட்டு காரணமாக, பஸ் வயல் நிலத்தினுள் புரளமால் தடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பின்னால் வந்த முச்சக்கர வண்டி பஸ்ஸின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, அதன் சாரதி மற்றும் அதிலிருந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 
பஸ்ஸுடன் மோதிய கன்டைனர் வீதியின் குறுக்கே புரண்டுள்ளதோடு, அது அவ்வாறு புரளும் நிலையில், பின்னால் வந்த சிறிய ரக காரின் மீதும் வீழ்ந்துள்ளது. இதனால் காருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
 
 
கன்டைனரில் சிக்கிய நிலையில் காணப்பட்ட சாரதி மீட்கப்பட்டு, 1919 அம்பியுலன்ஸ் வாகனத்தின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, பஸ்ஸின் சாரதியும் காயத்திற்குள்ளாகியுள்ளார்.
 
குறித்த மா லொறி வீதியின் குறுக்கே வீழ்ந்ததால், இரு மணி நேரத்திற்கு போக்குவரத்து தடைப்பட்டிருந்ததோடு, அதிலிருந்த மா மூடைகள் அகற்றப்பட்டு அது, பாதையிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் தேக்கமுற்ற வாகனங்கள் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தும் பல நேரத்திற்கு நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த விபத்தில் காயமுற்ற மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார் என்பதோடு, குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(படங்கள்: புஸ்பகுமார மல்லவ ஆரச்சி)
 
 

Add new comment

Or log in with...