Home » 2024 வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

2024 வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

- அரச கடன் முகாமைத்துவ நிறுவனத்தை நிறுவுதல்

by Prashahini
September 26, 2023 12:21 pm 0 comment

– 4 மாதகாலத்திற்கு 4 கப்பல் டீசல் கொள்வனவு
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 9 முடிவுகள்

2024 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2024 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2023.07.31 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2024 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. காட்டுத்தீ ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

மனிதர்களால் காட்டை அண்டிய பகுதிகளில் மேற்கொள்கின்ற தீமூட்டல்களால் குறிப்பாக, வரட்சியான காலநிலை நிலவுகின்ற காலங்களில் காட்டுத்தீ ஏற்படுகின்ற ஆபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, மொனறாகலை, பொலன்னறுவை, குருநாகல், புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்நிலைமை அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாண்டில் இதுவரைக்கும் 150 காட்டுத்தீக்கள் பதிவாகியுள்ளதுடன், அதனால் 2,600 ஹெக்ரெயார் காடுகள் அழிவடைந்துள்ளன. ஆகவே, தேசிய மட்டத்திலிருந்து கிராம மட்டம் வரைக்கும் அரச பொறிமுறையிலும், ஏனைய பங்காளர்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொண்டு காட்டுத்தீ ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அதனை அணைப்பதற்குமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் ஜோர்ஜியா வெளிவிவகார அமைச்சின் லெவன் மயிக்லட்சே இராஜதந்திர பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

நிபுணத்து அறிவுப் பரிமாற்றம், கல்வியாளர்கள் பரிமாற்றம், மாணவர்கள் பரிமாற்றம், ஒன்றிணைந்த ஆய்வு வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட கற்பித்தல் பொறிமுறைகள் மற்றும் ஏனைய குறித்த துறைகள் தொடர்பான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் ஜோர்ஜியா வெளிவிவகார அமைச்சின் லெவன் மயிக்லட்சே இராஜதந்திர பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, இருநாடுகளுக்கிடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஏற்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு குறித்த உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. முத்துராஜவெலவுக்கு அண்மையிலுள்ள கடலில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் நங்கூர மிதவைக்குத் (Mooring Bouy) தேவையான உதிரிப்பாகங்கள் பெறுகைக் கோரல்

முத்துராஜவெலவுக்கு அண்மையிலுள்ள கடலில் பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் நங்கூர மிதவைக்குத் தேவையான கடலில் மிதக்கின்ற 26 இறப்பர் குழாய்கள் மற்றும் அதற்குரிய உதிரிப் பாகங்களின் பெறுகைக்காக சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக தனியொரு விலைமனு மாத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த விலைமனுவை மதிப்பீடு செய்த தொழிநுட்ப மதிப்பீட்டுக்குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை M/s Yokahama Industrial Products Asia Pacific (pte) Ltd இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. எதிர்வரும் நான்கு (04) மாதகாலத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்தல்

2023.11.01 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்துவரும் நான்கு (04) மாதகாலத்திற்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்த முறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 05 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய M/s Petrochina International (Singapore) Pte. Ltd இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தின் டுபாய் நகரில் இடம்பெறுகின்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பணிவரைபு உடன்படிக்கையின் பங்காளர்களின் 28 ஆவது மாநாடு

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பணிவரைபு உடன்படிக்கையின் பங்காளர்களின் 28 ஆவது மாநாடு (COP 28) 2023.11.30 ஆம் திகதி தொடக்கம் 2023.12.12 வரை ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தின் டுபாய் நகரில் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு, காலநிலை மாற்றத்தால் அதிக இடர்களுக்குள்ளாகக் கூடிய நாடுகளுடன் இணைந்து, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக பொதுவாகக் குரலெழுப்புவதற்கும், அதற்காக அபிவிருத்தியடைந்த நாடுகளின் வாக்குறுதிகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு குறித்த நாடுகளை  ஈடுபடுத்துவதற்காக “காலநிலை நீதிப் பேரவை” (Climate justice Forum) எனும் பெயரிலான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவை இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது.

அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் பணிவரைபு உடன்படிக்கையின் பங்காளர்களின் 28 ஆவது மாநாட்டில் கலந்துகொள்கின்ற பிரதிநிதிகள் குழுவின் முனைப்பான பங்கேற்புக்காக அரச அரங்க (Country Pavilion) மாநாடு இடம்பெறுகின்ற காலப்பகுதியில் மேற்கொண்டு செல்வதற்கும், காலநிலை மாற்றங்களுக்குரிய தேசிய மட்டத்திலான தொடக்க முயற்சிகளை இப்பேரவையில் காட்சிப்படுத்தவும் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தம்

சமூகத்திலுள்ள இயலாமையுடன் கூடிய பிள்ளைகளின் நல்லாரோக்கியத்திற்கு முன்னுரிமையளித்து அவர்களுக்கு பரந்தளவிலான பாதுகாப்புக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக சட்டபூர்வமான நிறுவனமாக நிறுவப்பட்டுள்ள அல்லது சமூக சேவை அமைப்பாக பதிவு செய்வதற்கான எந்தவொரு சட்டத்தின் கீழும் பதிவுசெய்யப்பட்டுள்ள, அரசின் சுகாதார சேவைகள், கல்விக் கட்டமைப்புடன் இணைந்து குறித்த பிள்ளைகளுக்கு சுகாதார வசதிகளை வழங்குகின்ற எந்தவொரு தொண்டு நிறுவனத்திற்கும் வரிச்சலுகை கோருவதற்கு இயலுமாகும் வகையில் உண்ணாட்டரசு இறைவரியைத் திருத்தம் செய்வது பொருத்தமானதென முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை உள்ளடக்கி உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பதில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளைப் பெறல்

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 02 துணை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீதம் கொள்கை அடிப்படையிலான 02 கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளது. அதன் முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ் நெருக்கடி முகாமைத்துவ பணிவரைபு மற்றும் நிதிப்பிரிவின் உறுதிப்பாட்டை மேம்படுத்தலுக்காக துரித மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், இரண்டாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ் மீள்தகவு கொண்ட அனைத்தையும் உள்ளடக்கிய நிதி முறைமையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

முதலாவது துணை நிகழ்ச்சித்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள், 2% வீதமான வருடாந்த வட்டி வீதத்தில், 05 வருட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 25 வருடகால மீள்செலுத்தல் தவணைக் காலத்திற்குக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. அரச கடன் முகாமைத்துவ நிறுவனத்தை நிறுவுதல்

2022 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் நிறுவன மீள்கட்டமைப்பாக சுயாதீன அரச கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை நிறுவுவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதுடன், கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை, சர்வதேச நாணய நிதி விரிவாக்கக் கடன் வசதிகளின் கீழ் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள துறைகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கடன் முகாமைத்துவ நிறுவனத்தைத் தாபிப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளன.

குறித்த பங்காளர்களுடன் கலந்துரையாடிய பின்னர், கடன் முகாமைத்துவ மறுசீரமைப்புத் திட்டம், கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் சட்ட வரையறை போன்றன தற்போது திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கமைய, கடன் முகாமைத்துவ சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பதில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT