வரலாம் வரலாம் வா... பைரவா (1st Show) | தினகரன்


வரலாம் வரலாம் வா... பைரவா (1st Show)

நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் நள்ளிரவு காட்சியாக நேற்று நள்ளிரவு (11) திரையிடப்பட்டது.

vijay's bairavaa released in rohini theatre

அழகிய தமிழ்மகன் இயக்குநர் பரதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ள படம் பைரவா. இப்படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், வை.ஜி. மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, 'ஆடுகளம்' நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் பைரவா படத்தில் நடித்துள்ளனர்.

தைப்பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்ட பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் நேற்று (11) இரவு திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் பைரவா திரைப்படம் ரிலீஸாகிறது.

இதனிடையே, ரசிகர்களுக்காக பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த காட்சி திரையிடப்பட்டது. அப்போது தியேட்டர் முன்பு கூடியிருந்த விஜய் ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர். 

 

முதல் காட்சி முடிந்த நிலையில் படம குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், இடைவேளை அறிவிப்புக்கு முந்தைய காட்சி நல்ல ட்விஸ்ட் என்றும் கூறியுள்ள ரசிகர்கள், இரண்டாம் பாதியை அதி தீவிர விஜய் ரசிகர்கள் கூட ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளனர்.

'விஜய்க்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சண்டைக் காட்சிகளில் விஜய் பின்னியிருக்கிறார்' என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பலரும் வறுத்து எடுத்திருப்பது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத்தான். 'இவர் திறமையை கொஞ்சம் ஓவராகவே எடை போட்டுவிட்டோமோ எனும் அளவுக்கு மிக சுமாரான இசையை விஜய் படத்துக்குக் கொடுத்துவிட்டதாக' கடுப்பாகக் கூறியுள்ளனர் பலரும்.

அதேபோல படத்தில் நகைச்சுவையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கும் என்பது பலரது ஏகோபித்த கருத்து.

பைரவா விஜய் படம். விஜய் ரசிகர்களுக்கான படம் என்பது முதல் காட்சி பார்த்த ரசிகர்களின் கருத்து.

வரலாம் வரலாம் வா... பைரவா...

 


Add new comment

Or log in with...