Friday, April 19, 2024
Home » திருத்தூதரான புனித மத்தேயு

திருத்தூதரான புனித மத்தேயு

செப்டம்பர் 21ல் புனிதரின் திருவிழா

by gayan
September 26, 2023 11:28 am 0 comment

கத்தோலிக்கத் திருச்சபை திருத்தூதரான புனித மத்தேயுவின் திருவிழாவை கடந்த 21 ஆம் திகதி சிறப்பித்தது.

இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர் கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார்.

மாற்கு 2:14, லூக்கா 5:27 நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் உயிப்புக்கும் விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக விளங்குகிறார்.

கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.இத்தகைய சூழ்நிலையில்தான் இயேசு தனது சீடர்களில் ஒருவராக மத்தேயுவை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்ற மத்தேயு இயேசுவைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார்.

இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர்.

இயேசு, அதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார். (மாற்கு 2:16-17)

புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்துக் கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும் அவரது உயிப்புக்கும் விண்ணேற்புக்கும் சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது.

இயேசுவின் விண்ணேற்றத்துக்குப் பிறகு திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து செபித்தனர். பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு அவர்கள் அனைவரும் ‘இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா’ என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.

சுமார் 15 ஆண்டுகள் மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றியுள்ளார்.

கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர்.

இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. அது தவிர யூதக்கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்திருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது.

அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதேவேளை மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத்தேயு 28:20).

இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது.

இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கூறுகிறது.

எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை.

இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும்.

-எல்.எஸ்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT