மருமகனை முக்கிய பதவிக்கு நியமித்தார் டொனால்ட் டிரம்ப் | தினகரன்

மருமகனை முக்கிய பதவிக்கு நியமித்தார் டொனால்ட் டிரம்ப்

 

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் தனது மருமகனான ஜரெட் குஷ்னரை, வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகராக நியமித்துள்ளார்.

டிரம்பின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்காற்றிய 35 வயதான குஷ்னர், தனது புதிய பதவி மூலம் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் மூத்த மகளான இவான்கா டிரம்பை திருமணம் முடித்திருக்கும் குஷ்னர், ஒரு சொத்து மேம்பாட்டாளராக உள்ளார். எனினும் இந்த நியமனம் முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடியதும் உறவினர்களுக்கு சலுகை அளிப்பது தொடர்பான சட்டங்களை மீறுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கும் ஜனநாயக கட்சியினர் அவரது நியமனத்தை உடன் மீள் பரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக, தனது மருமகனை ஒரு மிகப்பெரிய சொத்து என்று புகழ்ந்துள்ள டொனால்ட் டிரம்ப், நிர்வாகத்தில் தலைமைப்பண்புமிக்க ஒரு முக்கிய பொறுப்பை அவருக்கு அளிப்பதில் தான் பெருமையடைவதாக தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டதை அடுத்து குஷ்னர், ரியல் எஸ்டேட் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். குஷ்னர் குடும்ப சொத்து மதிப்பு சுமார் 180 கோடி டொலர்களாக முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனத்தை மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள ஜரெட் குஷ்னர், இந்த வேலைக்காக அரசுப் பணத்தில் இருந்து சம்பளம் ஏதும் பெறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த தொழிலதிபரான டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். 


Add new comment

Or log in with...