Thursday, March 28, 2024
Home » ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் சட்டத்திலிருந்து நழுவினாலும் இறை பிடியிலிருந்து தப்பிக்க முடியாது

ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் சட்டத்திலிருந்து நழுவினாலும் இறை பிடியிலிருந்து தப்பிக்க முடியாது

by gayan
September 26, 2023 8:13 am 0 comment

ஈஸ்டர் தாக்குதலின் ஈனச் செயலுக்குரியவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தாலும்,இறை தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாதென தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்த விவாத்தில் உரையாற்றிய அதாஉல்லா எம்,பி,மேலும் தெரிவித்ததாவது:

நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் நடந்த யுத்தங்கள் வௌிநாடுகளின் சூழ்ச்சிகளுக்குப் பலியானதாலே ஏற்பட்டன . ஆயுத விற்பனையில் ஆர்வம் காட்டும் சக்திகள் எமது நாட்டில் மோதல்களை தூபமிடுகின்றன.இதேவாறான சூழ்ச்சியாகத் தான்,ஈஸ்டர் தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே,

இதற்குப் பின்னாலுள்ள சக்திகளை அடையாளம் கண்டு தண்டிப்பது அவசியம்.ஆட்சி,அதிகாரங்களின் இலக்குகளுக்காக யுத்தங்கள் அல்லது தாக்குதல் நடத்துவதை தேசிய காங்கிரஸ் எதிர்க்கிறது.இதற்காகத்தான், கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்களை நாங்கள் ஆதரித்தோம்.

படுகொலைகள் மற்றும் பழிவாங்கும் தாக்குதல்களை தோற்கடிப்பதற்காகவே எமது கட்சி உழைக்கிறது.

இறைவனை வழிபடச் சென்ற கத்தோலிக்க மக்களை குறிவைத்து நடாத்தப்பட்ட

இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.இஸ்லாத்தின் யுத்த தர்மங்களில் தற்கொலையும் இல்லை. தாவரங்களை வெட்டுவதற்கு அனுமதியும் இல்லை. பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியோர்களைக் கொல்வதற்கு இடமும் இல்லை. இத்தனை தர்மங்களையும் மீறி சஹ்ரான் என்பவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இதற்காக இதனை இஸ்லாத்துடன் முடிச்சுப்போட முடியாது. சஹ்ரான் ஒரு மௌலவியுமில்லை. காத்தான்குடியில் பிறந்த சஹ்ரானை அந்த ஊர்மக்களே விரட்டியடித்துவிட்டனர். எனவே, இத்தாக்குதலின் பின்னாலுள்ள சூழ்ச்சிக்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும். மலைகளை நகர்த்தக்கூடிய சூழ்ச்சிகளை எவர்கள் செய்தாலும் அதனைத் தடுத்து நிறுத்தும் சக்தி எல்லோருக்கும் பொதுவான இறைவனிடமே உள்ளது.இந்த இறை நியதியைப் புரிந்து சகலரும் பணியாற்றி ஈஸ்டர் ஈனச்செயலாளர்களை தண்டிப்போம். சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை 2018 வர்த்தமானியில் வௌியான விடயம். ஈஸ்டர் தாக்குதலு க்கு உதவியதற்கான சான்றாக இதைக் கற்பனைப்படுத்துவது அரசியல் முதலீடுகளுக்கா சூழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு இத்தாக்குதலை வைத்து பல சூழ்ச்சிகள் வகுக்கப்படுகின்றன.

இந்த சூழ்ச்சிகள் குறித்து அன்றே அறிந்திருந்ததால்தான், பேராயர் மெல்கம்ரஞ்சித் ஆண்டகை முஸ்லிம்களை எவரும் பழிவாங்க வேண்டாம் என்றார்.இதைப்பெருமனதுடன் முஸ்லிம்கள் ​நோக்குகின்றனர். இஸ்லாமும், கிறிஸ்தவமும் ஒரே சிந்தனையின் ஊற்று மதங்கள். ஆனாலும், கொரோனா காலத்தில் நல்லடக்கத்துக்காக முஸ்லிம்கள் குரல்கொடுத்தபோது மற்றும் மன்றாடியவேளை, இதே நல்லடக்கத்தை நம்பியிருந்த கிறிஸ்தவ சமூகம் ஒரே சிந்தனையை உயிரூட்ட முன்வராதமை ஆச்சரியத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.

 

ஏ,ஜீ,எம்,தௌபீக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT