பிணத்தின் மீது சவாரி செய்து அதிகாரத்தை கைப்பற்ற மஹிந்த அணியினர் முயற்சி | தினகரன்

பிணத்தின் மீது சவாரி செய்து அதிகாரத்தை கைப்பற்ற மஹிந்த அணியினர் முயற்சி

 

பிணத்தின் மீது சவாரி ஏறிச் சென்று ஹம்பாந்தோட்டையில் தமது அதிகார பலத்தை தக்கவைத்துக்கொள்ளவே அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு மஹிந்த அணியினர் இடையூறு விளைவித்துவருவதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை கைசாத்திடப்பட்டவுடன்,  இதுதொடர்பாக கண்காணிப்பதற்கு கமிட்டியொன்றை அமைத்து அதில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: தற்போது இலங்கை பல்வேறு பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை எற்பட்டுள்ளது. பல பில்லியன் செலவில் அமைக்கப்பட்டு ,வெறுமனே கொழும்பு துறைமுகத்தின் நிதியினால் இயங்கிவந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானித்தோம். ஹம்பாந்தோட்டை என்பது மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகும். எனவே ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை பயனுள்ளதாக மாற்றும் போது அப்பிரதேசம் சகல துறைகளிலும் அபிவிருத்தியடைவதுடன், இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

எனினும், அவ்வாறு அபிவிருத்தியடைந்தால் மஹிந்த ராஜபஷவின் பலம் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் இல்லாமல் போய்விடும் என்ற பயத்திலேயே மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினர் கோயில், விகாரை, பாடசாலைகளை அரசாங்கம் உடைத்து மக்களின் பூர்வீக நிலங்களை கைப்பற்ற முயற்சித்துவருவதாக பொய்யான பிரசாரங்களை செய்துவருகின்றனர். ஆனால், நாங்கள் அத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

அவர்களுடைய ஆட்சிகாலத்திலேயே அத்தகைய அத்துமீறிய செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டிருந்தன.ஹம்பாந்தோட்டையில் ருகுனு சர்வதேச மாநாடு மண்டபம், சூரிய வெவ விளையாட்டு அரங்கு, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள ராஜபஷ விமானநிலையம் என்பவற்றை ஹம்பாந்தோட்டையில் அமைத்த போதும் மக்களுடைய பூர்வீக நிலங்கள் கைப்பற்றப்பட்டன.

எனினும், அக்காலத்தில் யாரும் இத்தகைய ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு அவற்றை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கென்று மக்களின் காணிகள் அக்காலத்தில் சுவீகரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதலாவது கட்டமாக 450 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதுடன், இரண்டாவது கட்டத்தில் 610 குடும்பங்கள் வெளியேறப்பட்டன. எனினும், அதில் 10 பேருக்கு மட்டுமே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, மஹிந்த ராஜக்ஷ அரசாங்க காலத்தில் துறைமுகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பு சொந்தமாகவும் கொடுக்கப்பட்டிருந்தது.

வசந்தா அருள்ரட்ணம் 


Add new comment

Or log in with...