வில்பத்து விவகாரத்தை தென் பகுதி இனவாதிகளே தூக்கிப்பிடிக்கின்றனர் | தினகரன்

வில்பத்து விவகாரத்தை தென் பகுதி இனவாதிகளே தூக்கிப்பிடிக்கின்றனர்

 

வில்பத்து வனப் பகுதியை சேதப்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற பொய்களென அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.முசலி பிரதேச சபைக்குட்பட்ட முஸ்லிம்களின் பிரதேசங்களான மறிச்சுக்கட்டி,காயல் குழி ,கரடிக்குழி,கொண்டச்சி போன்ற பிரதேசங்கள்  2012ம் ஆண்டு பாரம்பரிய இடம் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானியில் இணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இச்சந்தர்ப்பத்தில் 1990லி புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்கள் புத்தளம் பகுதியிலுள்ள நலன்புரி முகாமில் தங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 22 வருடங்களின் பின்னர் மீளவும் அம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்கையில் அது அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்த மக்கள் ஏமாந்து போனதாகவும் ரிஷாட் பதியூதின் மேலும் கூறியுள்ளார். எனவே, இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் பாரம்பரியமாக அங்கிருந்த மக்களுக்கு இதன்மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இங்கு வினவப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த ரிஷாட் பதியூதின்: தனது சகோதரர் ஒருவர் தங்கம் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு இரு சகோதரர்கள் இருப்பதாக கூறிய அவர், ஒருவர் வர்த்தகர் எனவும் மற்றையவர் மாகாண சபை உறுப்பினர் எனவும் குறிப்பிட்டதோடு, அவர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.வில்பத்து விவகாரத்தில் வடமாகாண சபை அமைதியாக உள்ள நிலையில் இப்பிரதேசத்துடன் எவ்வகையிலும் தொடர்புறாத தென்புறத்து இனவாதிகளே இதை எதிர்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...