ரவிராஜ் கொலை வழக்கு: ஜூரி சபை தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு | தினகரன்

ரவிராஜ் கொலை வழக்கு: ஜூரி சபை தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (10) மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. கொலைசெய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பிரதிவாதிகளை விடுவித்து வழங்கப்பட்ட ஜூரி சபையின் தீர்ப்பை ரத்துச் செய்யுமாறும் இந்த வழக்ைக மீள விசாரணை நடத்துமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் இருந்தபோதும் ஜூரி சபை அதனை பொருட்டாகக் கொள்ளாது பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளதாகவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2006 நவம்பர் 10 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பில் பிரதிவாதிகள் ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் 2016 ஜுலை 20 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். மூன்று பிரதிவாதிகள் இல்லாத நிலையிலேயே வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கில் ஆஜரான பிரதிவாதிகளின் கோரிக் ைகப்படியே ஜூரி விசாரணை நடத்தப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஜூரி விசாரணை நடத்துவது தவறு என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஜூரி விசாரணை தொடர்பில் தனது சட்டத்தரணி மேல் நீதிமன்றத்தில் ஆட்சேபனை வெளியிட்டிருந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூரி விசாரணை முடிவில் கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அனைத்து பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். பிரதிவாதிகளுக்ெகதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் ஆராயாமல் ஜூரி சபை நியமிக்கப்பட்டதன் மூலம் தமது தரப்பிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஜூரி சபையின் தீர்ப்பை ரத்துச் செய்து பிரதிவாதிகள் அனைவரும் குற்றவாளிகளென தீர்ப்பளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. (பா) 


Add new comment

Or log in with...