இனவாத சர்ச்சைக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும்! | தினகரன்

இனவாத சர்ச்சைக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும்!

 

வில்பத்து விவகாரம் மீண்டும் பூதாகர நிலையை அடைந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பு அடிப்படையாக அமைந்துள்ளது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற சுற்றாடல் அமைச்சுக்குரிய நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, வில்பத்து சரணாலயத்திற்குரிய வனப் பிரதேசங்களை விரிவுபடுத்தி, தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப் பரப்புகளையும் உள்ளடக்கியவாறு வனஜீவராசிகள் திணைக்களத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்தே இந்த சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் வில்பத்து விவகாரத்தை தென்பகுதி சிங்கள மொழி ஊடகங்களும், சில தென்பகுதி அரசியல்வாதிகளும் சில சூழலியலாளர்களும் கையாளும் விதம் முஸ்லிம்களை சிங்கள மக்கள் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலையைத் தோற்றுவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

"இந்தச் சூழலில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்போடு உழைத்து 99.6 வீதம் வாக்களித்த எம்மை இந்த அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நோக்குகின்றதா" என்ற ஆதங்கம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து எவரும் பாதிக்கப்படாத வகையில் இச்சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

ஏனெனில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கலந்து கொண்ட உயரதிகாரிகள், 'வில்பத்து சரணாலயத்தில் எந்தவொரு சுற்றாடல் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சில ஊடகங்களும், சுற்றாடல் அமைப்புக்களும் சுட்டிக்காட்டும் சம்பவங்கள் வில்பத்து சரணாலயத்திற்கு வெளியில் இடம்பெறுபவை' என்றும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்திலுள்ள மறிச்சிக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவற்குழி, கூமாங்குளம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேற்றுமுன்தினம் நேரில் சென்று திரும்பியுள்ள வவுனியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பௌத்த தேரர்கள் குழுவினர், 'வில்பத்து வனப் பிரதேசத்தில் எதுவிதக் காடழிப்பும் இடம்பெறவில்லை' என்றும் 'வில்பத்து அழிக்கப்படுவதாக பொய் கூறி நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டிவிடவும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றும் கூறியுள்ளனர்.

'முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாச, பிரதமராகவும் வீடமைப்பு அமைச்சராகவும் இருந்த சமயம் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 1980 இல் திறந்து வைத்த வீடமைப்புத் திட்டத்தின் பழைய வீடுகள் சிலவற்றையும் நாம் பார்வையிட்டோம். அதனால் இவ்விவகாரம் குறித்து ஆட்சியாளர்கள் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்' என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் தென்பகுதியில் வில்பத்து விவகாரம் இவ்வாறு பூதாகரப்படுத்தப்பட்ட போதிலும் அப்பகுதி அமைவுற்று இருக்கும் வட மாகாண சபை தெளிவான நிலைப்பாட்டிலலேயே உள்ளது.

மன்னார் மாவட்டத்தினதும், வட மாகாணத்தினதும் எல்லைக் கிராமங்களான மறிச்சிக்கட்டி, பாலக்குழி, கொண்டச்சி போன்ற கிராமங்கள் வில்பத்து சர்ச்சை கிளப்பப்பட்டுள்ள பிரதேசத்தில் காணப்படு-கின்றன. அவை முஸ்லிம்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் பாரம்பரியக் கிராமங்கள்.

இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 1900 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றினர். அதன் பின்னர் அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தம் முடிவுற்ற பின்னர், அதாவது 2012ஆண்டில் தான் தம் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தொடங்கினர். இவர்கள் 22 வருடங்களுக்கும் மேலாகத் தம் சொந்த வாழிடங்களுக்குத் திரும்பாத காரணத்தினால் அவை காடுகளாகக் காணப்பட்டன. அவற்றைச் சுத்தப்படுத்தியே அம்மக்கள் தம் சொந்த வாழிடங்களில் மீளக்குடியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறான சூழலில் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. அந்தப் பின்புலத்தில் வட மாகாண சபையின் காணிகள் செல்வதைத் தவிர்க்கும் நோக்கில் 2012 ஆம் ஆண்டில் அவசர அவசரமாக ஜி. பி. எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பிலிருந்தபடி காடாகக் காணப்பட்ட பிரதேசங்கள் வில்பத்து வனாந்தரப் பிரதேசங்களாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டன.

அதன் விளைவாகத் தான் மறிச்சிக்கட்டி, பாலக்குழி, கொண்டச்சி போன்ற கிராமங்களும் வில்பத்து வானாந்தரத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த உண்மை தெளிவுபடுத்தப்படும் போது இவ்விவகாரம் கிடப்பில் போடப்படுவதும், சூடு தணிந்ததும் மீண்டும் விஸ்பரூபம் எடுப்பதாகவுமே கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றது. ஆனால் இவ்விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் பக்கச் சார்பற்ற முறையில் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும். எவரும் பாதிக்கப்படாத வகையில் இவ்விவகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்படுவது அவசியம். அப்போது வில்பத்து விவகாரத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்படும் வீணான ஐயங்களுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக் கூடியதாக இருக்கும். அதுவே எல்லோரதும் எதிர்பார்ப்பும் கூட.


Add new comment

Or log in with...