ஜெரூசலத்தில் இஸ்ரேல் படையினர் மீது லொரியை மோதவிட்டு நால்வர் கொலை

 

ஜெரூசலத்தில் இஸ்ரேல் படையினர் மீது லொரி வண்டியை மோதவிட்டு நால்வரை கொன்ற பலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

லொரியை ஓட்டி வந்த நபர், மிக வேகமாக படையினரின் கூட்டத்துக்குள் செலுத்துவதையும், அதில் அடிபட்டு விழுந்த வீரர்கள் மீது லொரியை மீண்டும் பின்னால் இயக்கியதையும் சிசிடிவி கெமரா காட்சிகளில் இருந்து பார்க்க முடிந்தது. மேலும் அதிகமானவர்களைக் கொல்வதற்காகவே அவர் லொரியை பின்னால் இயக்கியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

ஜெரூசலம் நகரை சுற்றிப் பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த இஸ்ரேல் இராணுவ வீரர், வீராங்கனைகள் பஸ்ஸில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த லொரி ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் பலர் லொரியின் சக்கரத்தில் சிக்கினர். இதையடுத்து, மற்ற இராணுவ வீரர்கள் லொரியை ஓட்டி வந்தவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கிழக்கு ஜெரூசலத்திற்கு அருகாமை சுற்றுப்புறமான ஜபால் அல் முகப்பிர் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பதி அஹமது அல் குபார் என்ற பலஸ்தீனரே இந்த தாக்குதலை நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதில் கொல்லப்பட்டிருக்கும் நான்கு இஸ்ரேல் படையினரில் மூவம் பெண்களாவர். இவர்கள் அனைவரும் தமது 20 வயதுகளில் இருப்பவர்களாவர்.

“மோசமான தாக்குதல் என்றும், இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்றும்” இஸ்ரேல் வானொலியில் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நடைபெற்ற போது உடல்கள் தெருவில் தூக்கியெறியப்பட்டதாக இஸ்ரேல் வானொலி தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த தாக்குதல் தொடர்புடைய புகைப்படங்களில், ஒரு லொரியின் முகப்பு கண்ணாடியில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

இஸ்ரேல் படையினரை கொன்ற நபர் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவுடன் தொடர்புட்டவர் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் தனது கூற்றுக்கான எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

சம்பவம் நடந்த இடத்தை, பாதுகாப்பு அமைச்சருடன் வந்து பிரதமர் நெதன்யாஹு பார்வையிட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து லொரியை ஓட்டிவந்த பலஸ்தீனர் வசிக்கும் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அந்த பலஸ்தீனரின் குடும்ப உறுப்பினர்கள் ஐவர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலஸ்தீன போராட்ட குழுவான ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலை வரவேற்றுள்ளது. இது ஒரு வீரச்செயல் என்று வர்ணித்திருக்கும் ஹமாஸ் பேச்சாளர் அப்துல் லதீப் கானு, ஏனைய பலஸ்தீனர்களும் தமது எதிர்ப்பை தீவிரப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2015 ஒக்டோபர் தொடக்கம் பலஸ்தீனர்களில் கத்திக்குத்து, வாகனத்தை மோதவிடுவது மற்றும் துப்பாக்கிச்சூடு போன்ற தாக்குதல்களில் 35 இஸ்ரேலியர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதே காலப்பிரிவில் இஸ்ரேலியர்களின் துப்பாக்கிச் சூட்டில் 200க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசல ஆக்கிரமிப்பு மற்றும் காசா பகுதி மீதான முற்றுகைக்கு எதிராக தனிப்பட்ட பலஸ்தீனர்களின் தாக்குதல்களாகவே கடந்த கால சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
17 + 1 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...