Thursday, March 28, 2024
Home » ஆசிய‌ மகளிர்‌ T20 கிரிக்கெட் இறுதிப்‌ போட்டி; இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய‌ மகளிர்‌ T20 கிரிக்கெட் இறுதிப்‌ போட்டி; இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம்

by Prashahini
September 25, 2023 4:17 pm 0 comment

ஹங்ஸோ விளையாட்டரங்கில் இன்று (25) நடைபெற்ற மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 19 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் சொந்தமானது.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.

சீனாவின் ஹங்ஸோ நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 3ஆவது நாளான இன்று மகளிர் T20 கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது.  இந்த இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணியின்‌ கேப்டன்‌ ஹர்மன்ப்ரீத்‌ கெளர்‌ துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்‌.

20 ஓவர்கள்‌ முடிவில்‌ 7 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை இந்திய அணி பெற்றது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 117 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களையே பெற்றது.

இதில் அனுஷ்கா சஞ்சீவனி (1), விஷ்மி குணரட்ன (0), அணித் தலைவி சமரி அத்தபத்து (12) ஆகிய மூவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க, இலங்கை 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும் ஹசினி பெரேரா (25), நிலக்ஷி டி சில்வா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து நிலக்ஷி டி சில்வா (23), ஓஷாதி ரணசிங்க (19) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 28 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால் இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை மீண்டும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

அதன் பின்னர் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று, 19 ஓட்டங்களால் தோல்வி அடைந்த நிலையில் தொடரில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதுடன் இலங்கை மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது

பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோக்கா ரணவீர 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT