கிறிஸ்தவ புத்தாண்டும் கலண்டர்களின் உதயமும் | தினகரன்


கிறிஸ்தவ புத்தாண்டும் கலண்டர்களின் உதயமும்

 

நாம் புதியதோர் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கின்றோம் இப்புத்தாண்டானது நமக்கு இறையருளை அபரிதமாகத் தந்திட நாம் வேண்டுதல்கள் மேற்கொள்வதோடு நம் சக மக்களோடு சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்திட சங்கற்பம் கொள்கின்றோம்.

ஜனவரி முதலாம் திகதியை நாம் ஆங்கில வருடப் பிறப்பு என்று கூறினாலும் கூட அது சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கிரகோரியன் நாட்காட்டியின் முதலாம் நாளாகும். இத்திகதியை நம்மில் சிலர் ‘தை’ 1 என அழைப்பர். ஆனால் இது தவறு. தை மாதம் முதலாம் நாள் பொங்கல் அன்று வருகின்றது இது ஆங்கில ஜனவரி மாதத்தின் முதல் நாள்.

இந்நாட்காட்டியானது 8ம் கிரகோரியார் என்ற பாப்பரசர் தமது வானியல் ஆராய்ச்சி குழுவில் சிபார்சின் பேரில் 1582ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நாட்காட்டியாகும்.

பாப்பரசரினால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது தவிர அதில் கிறித்தவ ஆதிக்கம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த நாட்காட்டி திருச்சபையின் விழாக்கொண்டாட்டங்களுக்கு அத்தியாவசியமாக இருந்தது என்பது மட்டும் உண்மை.

குறிப்பாக பாஸ்கா விழாவினை கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே தினத்தில் கொண்டாட வேண்டும் என்பது அனைவரினதும் விருப்பம். ஆதித் திருச்சபையின் வழக்கின்படி மார்ச் மாதம் 21ம் திகதி சம்பவிக்கும் சம பகலிரவு தினம் () பாஸ்கா விழாவினை நிர்ணயிக்கின்றது.

ஆனால் அதுகாலம் வரை வழக்கிலிருந்த ஜுலியன் காலண்டரில் ஆண்டுதோறும் ஏற்பட்ட மிகச் சிறியதொரு நிமிடக்கணக்கான பிழையினால் பத்து பதினாரு நாட்கள் தள்ளிப் போயிருந்தது. இது மத அனுஷ்டானம் செய்பவர்க்கு மட்டுமல்லாமல் நிலத்தை உழுது பின்னர் அறுவடை செய்யும் உழவர்களுக்கும் முக்கியமான விடயம்.

உண்மையில் கலண்டர் துல்லியமாக கணக்கிடப்படாவிட்டால் சிறு சிறு வித்தியாசங்கள் காலப் போக்கில் கூடிப் போய் விதைக்கும் காலம் அறுவடை காலம் போன்றவை மாதக் கணக்கில் மாறிப் போய்விடும்.

இதை கருத்திற் கொண்டமே கிரகோரியார் புதிய காலண்டரில் பத்து நாட்களை அகற்றிவிட்டது. மற்றபடி ஆண்டு இலக்கத்தை மாற்றமில்லை. இது 6ம் நூற்றாண்டில் கணித்தபடி “கிறிஸ்துவுக்குப் பின்” என்ற வாக்கியம் தொடர்ந்தது. கிறிஸ்து பிறப்பின் இக்கணிப்பை தியோனிசியஸ் எக்சிகஸ் என்பவர் கணித்திருந்தார்.

முதலில் கத்தோலிக்க நாடுகளிலே தான் இது புழக்கத்திற்கு வந்தது. எங்கே இதன் வழியாக பிரிந்துபோன புரோட்டஸ்டாண்டு சபைகளை வளைத்துப் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அநேக புரட்டஸ்டாண்டு நாடுகள் இதனை ஏற்பதற்கு முதலில் தயங்கினாலும் சுமார் 50-60 ஆண்டுகளில் அவகைளும் கூட இதனை ஏற்றுக்கொள்ளவே செய்தன.

18ம் நூற்றாண்டில் புரட்சியின்போது பிரான்ஸ் இந்த காலண்டரைக் கைகழுவி விட்டதென்றாலும் சில வருடங்களில் இதனை மீண்டும் தழுவினர். எனினும் பாப்பரசரின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட கிரேக்க நாடுகளிலும், கிரேக்க திருச்சபை பரவியிருந்த நாடுகளிலும் சுமார் 350 ஆண்டுகள் வரை ஜூலியன் காலண்டரே தொடர்ந்தது.

இதனால் தான் ரஷ்யாவில் ‘அக்டோபர் புரட்சி’ யை நவம்பர் மாதம் கொண்டாடுகின்றார்கள். எருசலேமில் உள்ள மரபு வழுவா திருச்சபைகள் சனவரி 6ம் திகதியை கிறிஸ்மஸ் என கொண்டாடுகின்றனர்.

கிரகோரியார் காலண்டரை மாற்றினாலும் ’புத்தாண்டு’ நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் மாறியதாகவே இருந்தது. இன்று நம் மத்தியில் பிரபலமாயிருக்கும் நாட்காட்டிகளாவன.

 

பௌத்த நாட்காட்டி 2561 ஆண்டு

உரோமை நாட்காட்டி 2760

சீன நாட்காட்டி 4712

எபிரேய நாட்காட்டி 5778

இந்து நாட்காட்டி

விக்ரம் 2073

சக 1938

கலியுக 5117

இஸ்லாமிய நாட்காட்டி 1430

ஜுலியன் நாட்காட்டி, (13 நாட்களைக் கழிக்கவும்)

முதலில் உரோமைப் பேரரசு தன் தலைமை நகராகிய உரோம் உருவாக்கப்பட்ட தினமாகிய மே 1ம் திகதியை கொண்டாடியது. பின்னர் அது ஜனவரி 1 ஆக மாறியது.

எனினும் மத்திய காலத்தில் திருச்சபையின் செல்வாக்கால் அது டிசம்பர் 25 அல்லது மார்ச் 25 என அவ்வப்போது மாற்றப்பட்டது. கிரேக்க மரபில் செப். 1 திகதியாக அது இருந்தது. இங்கிலாந்து தேசத்தில் 17ம் நூற்றாண்டு வரை கூட மார்ச் 25ம் திகதியே புத்தாண்டு தினமாக இருந்தது.

எனவே ஜனவரி 1ம் திகதிக்கு கிறிஸ்தவ அடையாளம் தருவது அர்த்தமற்றது. அது ஒரு மத சார்பற்ற தினம் இந்தியா போன்ற நாடுகளில் பத்துப் பதினைந்து மொழி கலாசாரத்தின்படி புத்தாண்டுகள் மாறுபடும் அதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள புதுவருடப் பிறப்புக்களாக அமைந்து விட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் புத்தாண்டு தினம் ஜனவரி 14 ஆகிய பொங்கல் தினமா அல்லது ஏப்பிரல 14 ஆகிய பாரம்பரிய தினமா என்ற முடிவில்லாத வாதம் நடந்துகொண்டிருக்கிறது. (ஸ)


Add new comment

Or log in with...