தெளிவின்மையால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் | தினகரன்

தெளிவின்மையால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம்

 

ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் பேட்டை அமைக்கப்படுவதை நாம் வரவேற்கிறோம். எனினும், அதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் தெளிவான அறிவித்தல்கள் வழங்கப்படாமையே மக்களைக் குழப்பமடையச் செய்ததென முன்னாள் சபாநாயகரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்த்தன எம்.பி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து சபையில் ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஹம்பாந்தோட்டையில் பெறப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில் பொதுமக்களின் வீடுகள், விவசாயக் காணிகள், மதஸ்தலங்கள் என பல உள்ளடங்குவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக கைச்சாத்திடப்பட்டுள்ள கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் 99 வருடங்கள் சீனாவுக்கு வழங்கப்படவிருப்பதாக வெளியான கருத்துக்களே மக்களைக் குழப்பமடையச் செய்தது.

இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டைக்குச் சென்று, பௌத்த மதத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து விளக்கமளித்திருந்தார். மக்களின் சந்தேகம் ஓரளவு நீங்கியபோதும் முழுமையாக சந்தேகம் நீங்கியிருக்கவில்லை. இந்த சூழ்நிலையிலேயே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு ஹம்பாந்தோட்டை மக்கள் தீர்மானித்தனர்.

ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளுக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே ஹம்பாந்தோட்டையில் பெறப்பட்ட காணிகளை பயன்படுத்த முடியும். அவற்றை பயன்படுத்தாது வைத்துக்கொண்டு மேலதிகமான காணிகளைப் பெறுவதற்கு முயற்சிக்கப்படுவது தொடர்பிலேயே மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுகிறது.

மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...