கலகம் விளைவித்த 32 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

கலகம் விளைவித்த 32 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

 
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கலகம் விளைவித்து, அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட 32 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
குறித்த சந்தேகநபர்கள், இன்று (09) ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் அவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 
நீதிமன்ற உத்தரவை மீறி இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு, 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் வயது குறைந்த சிறுவர் ஒருவர் உள்ளடங்குவதாக நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த சிறுவனை காலி, கிதுலம்பிட்டியவிலுள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட சீன - இலங்கை அபிவிருத்தி வலய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட மஹிந்த அணி ஆதரவாளர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...