பரராஜசிங்கம் கொலை; பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

பரராஜசிங்கம் கொலை; பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 பேரினதும் விளக்கமறியல், எதிர்வரும் மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  எம். கணேசராஜா முன்னிலையில் இன்று (09) இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
 
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் முன்னாள் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
 
இது தொடர்பில், சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.  
 
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்)
 

Add new comment

Or log in with...