காளான் உற்பத்தி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு | தினகரன்

காளான் உற்பத்தி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு

 

காளான் எனும் போது எம் கண் முன்னே வருவது எமது வீட்டு குப்பை மேடுகளில் முளைத் திருக்கும் காளான்களைப் பற்றியே. காளான் வரிசையில் உணவுக்காக பயன்படுத்தும் காளான் களும் உணவுக்கு பயன்படுத்தாத நச்சுக்காளான்களும் உள்ளன. இவற்றில் எமது குப்பை மேடு களில் முளைக்கும் காளான்கள் கூடுதலாக நச்சுத் தன்மை கொண்ட காளான்களாகும். காளான் உண்பவர்கள் முக்கியமாக இதில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இலங்கையில் காளான் உணவுகளும், அவற்றின் உற்பத்தியும் மிக குறைவாகும். காளான் உற்பத்திக்குரிய வளங்களும் போதிய காலநிலையும் எமது நாட்டில் இருந்தும் அவற்றிற்குரிய ஊக்குவிப்பும் வழிகாட்டல்களும் இன்மையால் உற்பத்தி செய்யப்படாத நிலை இருந்து வந்தது.

இந் நிலை இப்போது படிப்படியாக மாறி சிறிதளவேனும் உற்பத்தி செய்ய, உற்பத்தியாளர்கள் இறங் கியுள்ளனர். இதனால் காளான் உற்பத்திக்குரிய சிறிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. மிக மிக சிறிய முதலீட்டைக் கொண்டு ஆரம்பிக்கும் ஒரு குடிசைக் கைத்தொழி ல்தான் காளான் உற்பத்தியாகும். இதற்கு கூடிய முதலீடும், கூடுதலான இடவசதியும் தேவை யில்லை இருக்கின்ற இடத்திலும், வசதிக்கும் காளான் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.

இலங்கையில் குறிப்பாக சிப்பிக்காளான் எனும் இனம் உற்பத்தி செய்யப்படுகிறது. சிப்பிக்காளான் உற்பத்திக்குரிய விதைகள் இலங்கையிலே கிடைக்கின்றன. அவற்றை கொள்வனவு செய்து உற்பத்தியை மேற்கொள்ள முடியும். தற்போது எமது நாட்டில் உணவுப் பொருட்களுக்கு கூடுதலாக விலையேறிக் கொண்டு செல்லும் போது கூடுதலான சத்துக் கொண்ட காளான் மீது எமது மக்கள் ஆர்வம் கொண்டு வருவதாக சிறிய உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சைவம், அசைவம் என எல்லோ ருக்கும் ஏற்ற உணவாக காளான் இருந்துவருகிறது.

காளான் நல்ல சுவையையும், உடலுக்கு நல்ல சக்தியையும் தரக்கூடியது. இவற்றில் விற்றமின் பீ, சி மற்றும் டீ சத்துக்கள் அதிகளவிலும், தாதுப் பொருட்களான இரும்புச்சத்து, கல்சியம், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. அபிவிருத்தியடைந்த நாடுகளில் வர்த்தக அந்தஸ்தைப் பெற்றிருக்கும் காளான் தற்போது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் உற்பத்தி செய்யப்பட்டு நல்ல சந்தை வாய்ப்பையும் உருவாக்கிவருகிறது.

காளான் சூப், ஊறுகாய், காய்கறிகளுடன் சமைக்க என்று பல்வேறு உணவுப்பதார்த்தங்கள் செய்யப் பயன்படுகிறது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் காளான் வளர்ப்பு இப்போதுதான் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதனால் இதற்கு நல்ல சந்தை வாய்ப்பும், கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.

காளான் வளர்க்கும் இடம் மிகவும் சுத்தமானதாகவும், ஈரப்பதன் உள்ள இடமாகவும், ஏனைய நோய்த்தாக்கங்கள் தொற்றதா இடமாகவும் இருக்க வேண்டும், அசுத்தமான இடத்தில் காளான் உற்பத்தி செய்ய முடியாது. இதே போன்று அடிக்கடி எமது கண்காணிப்பும் காளான் உற்பத்திக்கு முக்கிய மாகும்.

காளான், இதயம் சம்மந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. காளானில் போலிக் அசிட் இருப்பதனால் இரத்தச் சோகையை கட்டுப்படுத்தக்கூடியது. அதே போன்று சிறந்த கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான சத்துக்களும் உள்ளன. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்டைசின், எரிட்டிடைனின் போன்ற வேதிப் பொருட்கள் கொழு ப்புப் பொருட்களை எவ்வித பாதிப்பும் இல்லாமல் வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமடைந்து இதயம் பலப்பட்டு சீராக செயல்பட உதவுகிறது.

மூட்டுவாதம், மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது. காளான் சூப் தினமும் அருந்தி வருவதனால் பெண்களின் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 100 கிராம் காளானில் 35 சதவீகிதம் புரதச் சத்து உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாகவும் அமைகிறது.

6 வயது முதல் 60 வயதுவரை காளானை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராது என கூறப்படுகிறது. இவ்வாறு பல நோய்க்கு மருந்தாகும் காளானை கிரேக்கர்கள், ரோமானியர்கள் தெய்வீக மாமிசமாகவே அறிந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 14ஆம் லூய் எனும் பிரஞ்சு நாட்டு அரசன் ஆட்சிக்காலத்தில் முதன் முதலாக காளான் பயிரிடப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.

இலங்கையில் உற்பத்தி செய்யக் கூடிய காளான் வகைகளான சிப்பிக்காளான், சொட்டான் காளான், லேனா பஹிது காளான், குட்டான் காளான், மொணற காளான், மாவெலி காளான், ஹூன்வெலி காளான் என்பன சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் கூடுதலாக சிப்பிக்காளானே இலங்கையில் பயிரிட ப்பட்டு வருகிறது. இவ் இனத்திற்கே கூடுதலான கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.

அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மகாசக்தி பௌண்டேஷன் அமைப்பினர் சுமார் 3மாதங்களிற்கு முன்னர் இருந்து காளான் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுவருகின்றனர். இவற்றின் அறுவடை யிலும் வெற்றி கண்டுள்ளனர். சுமார் 42 நாட்களின் பின்னர் காளான் உற்பத்தியின் அறுவடை ஆரம்பிக்கின்றது. ஒரு முறை அறுவடை செய்த காளானின் அடியில் இருந்து சுமார் 10 தடவைகள் தொடர்ந்து காளான் அறுவடை பெறமுடிகின்றதாக மகாசக்தி பௌண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளரும், வளதாரியுமான ஆறுமுகம் அசோக்கா தெரிவித்தார்.

தற்போது காளான் ஒரு கிலோகிராம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோகிராம் காளான் உற்பத்திக்குரிய செலவு 75 ரூபாவே ஆவதாக தெரிவிக்கப்படுகிறது. காளானை உற்பத்தி செய்து இரண்டு முறையாக விற்பனை செய்யப்படுகிறது ஒன்று பச்சையாகவும், அடுத்தது உலர் காளானாகவும் விற்கின்றனர். காளானை பயன்படுத்தி 400 வகையான உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்படுகிறது. 200 கிராம் காளான் 4பேர் சமைத்து சாப்பிடப் போதுமானது அதற்கான செலவு 60 ரூபாவாகும்.

வெளிநாடுகளில் கூடுதலானோர் உடல் அழகு பொழிவு பெறுவதற்கும், நோய்க் கட்டுப்பா ட்டிற்குமாக காளான் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக கொரியாவில் உடல் அழகு பெறுவ தற்கான கிறீம் தயாரிப்பதற்கு காளானை பயன்படுத்துகிறார்கள், அதே போன்று பாம் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இவை பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருமானம் பெறுகிறார்கள். இவ்வாறு பல பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படும் காளான் இலங்கையில் இப்போது தான் அறிமுகமாகி வருகின்றது. சில விரல் விட்டு எண்ணக்கூடிய ஹோட்டல்களிலும், சாதாரண கடைகளிலும் உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தி வருகிறார்கள்.

அம்பாரை மாவட்டத்தில் மட்டும் அண்மைய ஆய்வு ஒன்றின் படி, ஒரு மாத்திற்கு மட்டும் 80 இலட்சம் ரூபா முகத்திற்கு பூசப்படும் கிறீமிற்கு மக்கள் செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமாக எத்தனைபேரின் உடல் முகம் பொழிவு பெற்றிருக்கின்றது? காலப்போக்கில் எத்தனை பேரின் முகம் மற்றும் உடல் நோய்க்குள்ளாக்கப்பட்டிருக்கிறது? என ஆராய்ந்து பார்த்தால் கிறீம் பாவனையின் பலன் தெரியும்.

எனவே இவ்வளவு கூடுதலான பணத்தை செலவு செய்து நோயை தேடுவதைவிட இயற்கையாக கிடைக்கும் காளானை எமது உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் பொழிவு பெறும். நோயில் இருந்து தப்பித்தும் கொள்ளலாம்.

எனவே காளான் உற்பத்தி என்பது மிக இலகுவாக மேற்கொள்ளக்கூடிய ஒரு குடிசைக்கைத்தொழிலாக இருக்கிறது. இதனை நாம் ஒவ்வொருவரது வீட்டிலும் ஆரம்பிக்கவேண்டும். இதனால் மிகக்குறைந்த செலவில் மிகக் கூடுதலான பலனை அனுபவித்துவிடலாம். குறிப்பாக காளான் உற்பத்தி தொடர்பான ஊக்கமும், விழிப்புணர்வும் இலங்கையில் ஏற்படுத்தப்படவில்லை இதுவும் இலங்கையில் காளான் உற்பத்தி செய்யப்படாமைக்கான முக்கிய காரணமாகும்.

 தற்போது தனியாரே சில இடங்களில் காளானை உற்பத்தி செய்து வருகிறார்கள். இதனை மேலும் விரிவு படுத்த சிறு கைத்தொழில் அமைச்சு அதே போன்று விவசாயத் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படும் விவசாய அமைப்புக்கள் முன்வரவேண்டும். மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதன் சாதக, பாதகங்களை மக்களுக்கு அறிவூட்டி காளான் செய்கையை ஊக்குவிக்கமுடியும்.


There is 1 Comment

நான் வடமாகாணத்தே சேர்ந்த விவசாயி எனக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட ஆர்வம் உண்டு இது தொடர்பான ஆலோசனைகளை மகாசக்தி பௌன்டேசன் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றேன் அவர்களை தொடர்பு கொள்ள எனக்கு உதவி செய்தால் நன்று 0752700147 இந்த இலக்கம் மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள்

Pages

Add new comment

Or log in with...