பொருளாதார அபிவிருத்தி இலக்கை நோக்கிய பயணம் | தினகரன்

பொருளாதார அபிவிருத்தி இலக்கை நோக்கிய பயணம்

 

நாட்டு மக்கள் கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவித்தது போதும். இனிமேலும் அவர்களால் துயரில் வாழ முடியாது. அவர்களுக்கு நல்லதொரு சுபிட்சமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். அந்த சுபிட்ச வாழ்வுக்கு நல்லதொரு பொருளாதார வளர்ச்சி மிக முக்கியமானதாகும். அவ்வாறான பொருளாதார வளர்ச்சி தானாக ஏற்பட்டு விடப் போவதில்லை. அதன் பொருட்டு பொருளாதாரத்தை நாம் மேம்படுத்த வேண்டும். வறுமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும். வேலையில்லாப் பிரச்சினையை குறைக்க வேண்டும்.

இவை எமது வார்த்தைகள் அல்ல. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கும் கருத்துகளாகும்.

மக்களின் கைகளில் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்வாதாரம் சீராக அமைய முடியும். இதனை சும்மா இருந்து சாதிக்க முடியாது. ஆரோக்கியமான பொருளாதார வேலைத் திட்டமொன்று முன்கொண்டு செல்லப்பட வேண்டும். இன்று எமது நாடு கடன் பளுவில் வாழும் நாடாகவே உள்ளது. இதிலிருந்து மீளவும் வேண்டும். அதே சமயம் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பவும் வேண்டும். இரண்டையும் சமகாலத்தில் முன்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள் நாடு உள்ளது. இந்தப் பாரிய பொறுப்பில் நல்லாட்சி அரசு காணப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல்வேறு முறைகளைக் கையாள வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கின்றோம். இதற்கான வேலைத் திட்டத்தை நேற்றுமுன்தினம் பிரதமர் அறிவித்திருக்கிறார். 'பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்ட பயணம், அனைவருக்கும் நன்மை தரும் பொருளாதாரம்' என மகுடமிடப்பட்ட அந்த பொருளாதார பிரகடனத்தை தூரநோக்குடன் கூடியதொன்றாகவே பார்க்க முடிகின்றது.

அடுத்து வரும் பத்தாண்டுகளை இலக்காகக் கொண்டு ஒரு வருட காலத்துக்குள் முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தித் திட்டம் இதுவாகும். கடந்த இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் என்ன செய்தது என்பதை இந்தப் பிரகடனத்தை வாசிப்பதன் மூலம் நன்கு அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

2015 ஜனவரி 8 ஆம் திகதியுடன் ஆரம்பிக்கப்பட்ட நல்லாட்சிப் பயணத்தின் இரண்டாவது அபிவிருத்தித் திட்டத்தை புத்தாண்டில் தொடங்கியுள்ளோம். நாட்டை எதிர்கொண்ட கடன் பளுவிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. இந்த நிலை மேலும் இரண்டு மூன்று வருடங்கள் நீடிக்கலாம். அதற்காக அபிவிருத்திப் பணிகளை முடக்க முடியாது என்பது அரசின் நோக்கமாகும்.

ஆசிய நாடுகளுடன் பேசி பல்வேறுபட்ட முதலீட்டுத் திட்டங்களை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, யப்பான் மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்கிடையில் ஜி.எஸ்பியும் கிடைக்கலாமென நம்பப்படுகிறது. அடுத்ததாக இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையும் மிக விரைவில் செய்து கொள்ளப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தம் எந்த விதத்திலும் எம்மைப் பாதிக்காது என அரசாங்கம் உறுதி செய்துள்ளது. சீனா, இந்தியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளுடனான சந்தை வாய்ப்பையும் அதிகரித்துக் கொள்ளவுள்ளோம். இதனால் 4,000 மில்லியன் வருமானத்தை எம்மால் ஈட்டிக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசின் இலக்கு. எதிரணியினரின் கூச்சல்களால் எதுவும் நடந்து விடப் போவதில்லை. கூச்சல் போடுபவர்கள் தமது கடந்த கால செயற்பாடுகளை மீட்டிப் பார்ப்பது நல்லது என்ற பிரதமரின் கருத்து நியாயமானதே ஆகும். நாட்டை மூன்று வலயங்களாகப் பிரித்து அவற்றில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தியை முன்னெடுக்கும் பிரதமரின் திட்டத்தை தூரநோக்குக் கொண்டதாகவே பார்க்க முடிகிறது.

அன்று 1978 இல் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையால் நாட்டை எந்த அளவுக்கு வளப்படுத்த முடிந்ததோ, அதை விடவும் ஒரு படி முன்னேறி ஆசியாவின் அதி சிறந்த பொருளாதார வளம் மிக்க நாடாக எமது நாட்டை மாற்றுவதே நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரே இலக்காகும். இந்த பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் விடுத்திருக்கும் அழைப்புக்கு நாட்டு மக்கள் உரிய மதிப்பளித்தாக வேண்டும்.

10 ஆண்டுகளை இலக்காகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. நாட்டை வளம் மிக்கதொரு இலங்கையாக மாற்றியமைக்கும் இந்த பாரிய திட்டத்தின் மூலம் நாட்டின் ஒரு அங்குலப் பூமியும் எந்த நாட்டுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கப்படப் போவதில்லை என்று பிரதமர் உறுதிமொழி வழங்கியிருக்கிறார்.

முழு நாட்டையும் உள்வாங்கியதான இந்த பொருளாதார அபிவிருத்தித் திட்டம் சட்ட ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைவானதாகவே வகுக்கப்பட்டுள்ளது. காணிச் சட்டத்தின் பிரகாரம் காணிகளை குத்தகைக்கு வழங்கும் போது ஆகக் கூடிய எல்லையாக 99 வருடம் என்பதே நியதி. அதற்கு அதிகமாக ஒரு அங்குலத்தைக் கூட குத்தகைக்கு வழங்கப் போவதில்லை என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நாட்டை வளப்படுத்தி செழிப்பு மிக நாடாக, ஆசியாவின் பொருளாதார கேந்திர மையமாக மாற்றுவதே பிரதமரின் நோக்கமாகக் காணப்படுகிறது.

இதற்கமையவே ஆசிய நாடுகளின் முழு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளினூடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் எமது உற்பத்திகளுக்கு உலக சந்தையில் கூடுதலான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எமது பொருளாதார முன்னேற்றத்துக்கு இன்று அவசியமாக இருப்பது ஒழுங்குபடுத்தலாகும். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் திறந்து விடுவதன் மூலமே செல்வச் செழிப்பு மிக்க நாடாக மாற்றக் கூடிய எதிர்பார்ப்பை யதார்த்தமாக்கிக் கொள்ள முடியும்.

இந்த இலக்கு நோக்கிய பயணத்தில் எந்த விதமான உள்நோக்கமும் கிடையாது. பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ள ஒரு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வது மிகக் கடினமானது. இதை மனதிலிருத்தியே நல்லாட்சி அரசாங்கம் இந்த பொருளாதார பொது வேலைத் திட்டத்தை முன்வைத்துள்ளது. இதில் குறைபாடுகள் காணப்படலாம். ஆனால் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு சரியான திசையில் பயணிப்போமானால் பிரதமரது தூர நோக்குப் பார்வை நிச்சயமாக ஒரு வெற்றிப் பாதையாகவே அமைய முடியும்.

அடுத்த 10 ஆண்டுகளில் நாடு செழிப்புறுவதன் மூலம் ஆசிய நாடுகள் எமது நாட்டை தலைநிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு உச்ச நிலைக்கு கொண்டு வரும் பிரதமரின் கனவை நனவாக்குவதற்கு மக்கள் பலம் மிக அவசியமொன்றானதாகும். அதனை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் பிரதமர் காணப்படுகிறார். எனவே இந்தப் பயணம் வெற்றியளிக்கும் என்பதை திடமாக நம்பலாம்.


Add new comment

Or log in with...