ஸ்திரமற்ற நிலையை உருவாக்க சு.க. துணைபோகாது | தினகரன்

ஸ்திரமற்ற நிலையை உருவாக்க சு.க. துணைபோகாது

 

2017 ல் ஆட்சியை கவிழ்க்கும் சிலரது கனவு நனவாகாது. நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள சுதந்திரக் கட்சி ஒருபோதும் துணை போகாது என சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் நேற்று உறுதியாக தெரிவித்தனர்.

அரசாங்கம் நாட்டுக்குப் பாதகமான வழியில் செல்ல முற்பட்டால் அரசிலிருந்து விலக தயங்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர்கள், இரு கட்சிகளுக்குமிடையில் சிறு, சிறு முரண்பாடுகள் இருந்த போதும் அரசிலிருந்து வெளியேறும் நிலை தற்பொழுது எழவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

நல்லாட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பாடு குறித்தும் 2017ல் ஆட்சியில் இருந்து விலகுவதா, நீடிப்பதா என சு. க. பேச்சாளர் அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருப்பது பற்றியும் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர,

எனது வீட்டில் நடந்த சு. க. அமைச்சர்களின் சந்திப்பு பற்றி தவறான கருத்துகள் கூறப்படுகின்றன. நான் அமைச்சு பதவியை விட்டு விலக தயாராவதாகவும் கூறப்பட்டது. இவற்றில் உண்மை கிடையாது. மக்களை தமது பக்கம் திருப்ப​வே 2017 ல் ஆட்சி கவிழ்வதாக கூறப்பட்டுள்ளது என்றார்.

சு. க. சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது,

ஐ. தே. க.வும் சு. க.வும் ஒப்பந்தம் மேற்கொண்டே தேசிய அரசாங்கம் அமைத்து செயற்படுகின்றன. இதனை மீறும் வகையிலோ குறைபாடுகளை திருத்தி இணைந்து செயற்பட முடியாத நிலை வந்தாலோ தீர்க்கமான முடிவுக்கு வர முடியும்.

2017 ல் ஆட்சியை கவிழ்ப்பதாக சிலர் கூறியுள்ளனர். இன்னும் 6 மாதகாலத்தில் ஆட்சி கவிழ்ந்ததா என சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று வினவலாம். ஆட்சியிலுள்ளவர்களை கொலைசெய்து விட்டு இராணுவப் புரட்சி செய்தே ஆட்சியை கவிழ்க்க முடியும்.

நல்லாட்சி அரசில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து முன்னேறுவது குறித்தே இங்கு ஆராயப்பட்டது. அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையிலே முடிவுகள் எடுப்பது பற்றி இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த ஆட்சி நாட்டுக்கு சாதகமானதாக இருந்தால் ஏன் உடைக்க வேண்டும். அரசாங்கம் தவறான பாதையில் செல்வதாக இருந்தால் முடிவு எடுக்க முடியும்.

இந்த வருடத்தில் நாம் அரசாங்கத்திலிருந்து ஒதுங்கினால் முதலீடுகள் வருவது தடைப்படாதா? ஆட்சியை கவிழ்ப்பதாக சிலர் கூறுவது எப்படி சாத்தியமாகும். நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ளும் பாவ காரியத்திற்கு சு. க. துணை போகாது. நாம் கட்சியை விட நாடு பிரதானமானது என சிந்தித்து செயற்படுகிறோம். தற்போதைய யாப்பு படி ஆட்சியை கவிழ்க்க முடியாது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காட்டுவோருக்கு பிரதமராக முடியும் என்றார்.

இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன விலகியது குறித்து பதிலளித்த அவர், நல்லாட்சிக்குள் மோதல் கிடையாது அதனால் அவர் விலகவில்லை. கட்சியில் உள்ள ஜனநாயக சுதந்திரத்தையே இது காட்டுகிறது. எமது கட்சி சர்வாதிகார கட்சியல்ல. ஒன்றிணைந்த எதிரணி எதிர்பார்ப்பது போன்று மேலும் பலர் அமைச்சு பதவியில் இருந்து விலக மாட்டார்கள். எமக்கும் விலக சுதந்திரம் இருக்கிறது. அதற்கு தடை கிடையாது என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...