லொத்தர் முகவர்களின் ஒப்பந்தம் இடைநீக்கம் | தினகரன்


லொத்தர் முகவர்களின் ஒப்பந்தம் இடைநீக்கம்

 
நேற்றைய தினம் (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லொத்தர் சீட்டிழுப்பு டிக்கெட் விற்பனை முகவர்களின் ஒப்பந்தங்களை இடைநிறுத்துவற்கு தீர்மானித்துள்ளதாக, அபிவிருத்தி லொத்தர் சபை அறிவித்துள்ளது.
 
லொத்தர் சீட்டிழுப்பு டிக்கட்டுகளை ரூபா 20 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், தங்களுக்கான தரகுத் தொகையை அதிகரிக்குமாறு கோரி, லொத்தர் சீட்டிழுப்பு டிக்கெட் விற்பனை முகவர்களால் நேற்றைய தினம் புறக்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
இதேவேளை, குறித்த முகவர்களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முகவர்களின் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கான அதிகாரம் தங்களுக்கு உள்ளதாக தேசிய லொத்தர் சபை அறிவித்துள்ளது.
 
அத்துடன் ஒரு மாத காலப் பகுதியில் எவ்வித விற்பனையையும் மேற்கொள்ளாதவர்களையும் இவ்வாறு இடைநிறுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர், இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்தும் தாங்கள் நன்கு அறிவோம் எனவும் தெரிவித்தார்.
 
அத்துடன் லொத்தர் சபையின் சொத்துகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும், தற்போது லொத்தர் விற்பனை தொடர்பில் புதிய முகவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இம்மாதமளவில் மேலும் பலருக்கும் முகவர் உரிமை வழங்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
இதேவேளை, லொத்தர் சீட்டிழுப்பு டிக்கட்டுகளின் விலைகள் தொடர்ந்தும் அதே நிலையில் பேணப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தெரிவித்த தேசிய லொத்தர் சபையின் தலைவர் சியாமில பெரேரா, முகவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்கப்போவதில்லை என சுட்டிக்காட்டினார்.
 

Add new comment

Or log in with...