பதவி விலகுவாரா பன்னீர் செல்வம்? | தினகரன்

பதவி விலகுவாரா பன்னீர் செல்வம்?

 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.கவை வழிநடத்த வேண்டியது யார் என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து மோதல் நிலவி வருகிறது.

ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்த அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்பது அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கருத்து.

ஆனால், அ.தி.மு.கவை சேர்ந்த தொண்டர்களும், அ.தி.மு.க அனுதாபிகளும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு தீபா தனது நிலைப்பாட்டை உறுதியாக கூறவில்லை. "இப்போது நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. பொறுத்திருங்கள்" என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அடுத்தகட்டமாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது. இது தொடர்பாக அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தி.நகரில் உள்ள தீபா வீட்டிற்கு அ.தி.மு.க தொண்டர்கள் தினமும் படையெடுக்கிறார்கள்.

வீட்டின் முன்பு குவியும் தொண்டர்கள் ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று கோ‌ஷம் எழுப்புகிறார்கள். கட்சிப் பொறுப்புக்கு வரும்படி தீபாவை வலியுறுத்தி வருகிறார்கள். வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் வருகிறார்கள். பெண்களும் பெருமளவில் வருகிறார்கள்.

இவ்வாறு குவியும் தொண்டர்கள் இரவு வரை நிற்கிறார்கள். தொண்டர்கள் குவிந்ததும் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களைப் பார்த்து கும்பிட்டு பொறுமையாக இருக்கும்படி கூறுகிறார்.

ஆனால் தொண்டர்கள் அவரிடம் கட்சிக்கு வாருங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். அவர்களிடம் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன் அவர்களது கருத்தையும் பதிவு செய்யும்படி கூறுகிறார். நேற்று ஒரே நாளில் 3 பதிவேடுகள் நிரம்பியது.

அங்கு திரளும் தொண்டர்கள் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் தீபாவை வற்புறுத்துகிறார்கள்.தற்போது சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்ற அதேவேளை, எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த முதல்வர் நாற்காலியில் சசிகலாவையெல்லாம் அமர வைக்கிறார்களே என்ற கொந்தளிப்பும் விரக்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினரிடத்தில் இருந்து வருகிறது.

சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற கோஷம் நேற்றுமுன்தினம் உச்சத்தை அடைந்தது. இதில் கடும் விரக்தி அடைந்த சென்னை பிராட்வே பி.ஆர் கார்டன் தெருவைச் சேர்ந்த முனுசாமி என்ற அதிமுக தொண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுஇவ்விதமிருக்க, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை நெருக்கடி கொடுத்து வாங்கி விட்டது மன்னார்குடி கோஷ்டி என்கிறது அதிமுக வட்டாரங்கள்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தாமே முதல்வராக விரும்பினார் சசிகலா. ஆனால் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டு அமைச்சரவையில் 2-வது இடத்தில் இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது.இதை சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டியால் ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக 25 நாட்கள் நாடகத்தை அரங்கேற்றி அதிமுக பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றினார் சசிகலா.

அதிமுக பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றிய உடனேயே மீண்டும் முதல்வர் பதவிக்கு குறிவைத்தது மன்னார்குடி கோஷ்டி. அமைச்சர்கள் மூலமாக போர்க்கொடி தூக்க வைத்தனர். உச்சகட்டமாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பன்னீர்செல்வத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்.

நிலைமை மிகமோசமான நிலையில் எந்த காரணத்தை முன்னிட்டும் ராஜினாமா செய்ய வேண்டாம் என மத்திய அரசு பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தல் விடுத்தது. ஆனால் போயஸ் கார்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆலோசனைகளின் போது பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டதாம் மன்னார்குடி கோஷ்டி.

இது ஒருபுறமிருக்க சசிகலாவை முதல்வராக்கும் அளவுக்கு அந்த பதவி எளிதாக போய்விட்டதா என 'ஒன் இந்தியா தமிழ்' வாசகர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கியதன் மூலம், அவரை முதல்வர் பதவிக்கு நகர்த்தி செல்ல ஆயத்தங்கள் நடக்கின்றன. ஜெயலலிதாவால் அரசியலில் இருந்து தூரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா திடீரென முதல்வர் பதவி வரை நகர்வது குறித்து வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒன் இந்தியா தமிழ் வெப்சைட் சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

மிழக அரசியலில் கடந்த பத்து நாட்களாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் செய்தி, 'அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுள்ள சசிகலா, புனித ​ேஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றுவாரா?' என்பதுதான். பொதுச் செயலாளர் பதவியைத் தொடர்ந்து, முதல்வர் பதவிதான் என்கிறார்கள் பலர்.

ஜெயலலிதா முன்னாள் முதல்வராகவே சமாதியில் அடங்கினார். அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரில் இடம்பெற்றுள்ள அண்ணா மற்றும் கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர். ஆகியோர் மறைந்த போது, தமிழகத்தின் முதல்வராகவே இறந்தார்கள். அந்தக் காலத்தில் எல்லாம், இடைக்கால முதல்வர் மட்டுமே நியமிக்கப்பட்டு, அவர்கள் இருவரும் முதல்வராகவே அடக்கமும் செய்யப்பட்டார்கள்.

முதல்வர் பதவியிலேயே ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்குமானால், அடக்கம் செய்யப்பட்ட திராவிட இயக்க தலைவர்களில் பெருமை கிடைத்திருக்கும். ஆனால், ஜெயலலிதா முன்னாள் முதல்வராகவே அடக்கம் செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, அழுது கொண்டே பதவியேற்ற முதல்வர் ஒ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும், இந்த முறை எந்தக் கண்ணீரும் வடிக்காமல் நள்ளிரவில் பொறுப்பேற்றனர். இது, அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அவர் உருவாக்கிய கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா இரண்டாக உடைந்த கட்சியை பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் ஒன்றிணைத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டார். 1991-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா முதல்முறையாக தமிழகத்தின் முதல்வர் பொறுப்பேற்றார்.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டங்களில், அவர் பதவி விலக நேரிட்டதால் மாற்று முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்துள்ளார். அதன் காரணமாகவே ஜெயலலிதா மரணம் அடைந்தபோதும் ஒ.பி.எஸ் தலைமையிலேயே அ.தி.மு.க அரசு அமைந்தது.

ஆனால், வழக்கில் இருந்து விடுபட்டு ஜெயலலிதா மீண்டு வந்தபோது ஒ.பி.எஸ் முதல்வர் பதவியை விட்டு விலகி,ஜெயலலிதா பதவியேற்க வழிவகுத்தார். ஆனால் இந்த முறை அது சாத்தியமில்லை. ஜெயலலிதா இந்த உலகை விட்டே மறைந்து விட்டார்.

ஜெயலலிதா மறைந்ததும், முதல்வர் பொறுப்பேற்ற ஒ.பி.எஸ், ஜெ. உடல் அருகே சோகமே உருவான முகத்துடன் மணிக்கணக்கில் நின்றார்.

ஏற்கெனவே, இரண்டுமுறை யாரிடம் இருந்து முதல்வர் பதவியை பெற்றாரோ, அதே நபரிடம், அந்தப் பதவியை, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பது போல மகிழ்ச்சியுடன் பதவியில் இருந்து விலகியவர் ஓ.பி.எஸ்.

ஆனால் இந்த முறை கடனைக் கொடுத்தவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரிடம் திருப்பிக் கொடுக்கப் போகிறார். அதற்கேற்ப போயஸ் கார்டனிலும் குதூகலத்துக்கு குறைவில்லை. 'இனி எல்லாமே சின்னம்மாதான்' என்ற உறுதியான குரலுடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டர்கள் வலம் வருகின்றனர். பன்னீர்செல்வம் எக்காரணம் கொண்டும் முதல்வர் பொறுப்பை மட்டும் விட்டுக் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும், சசிகலா தரப்பில், அவரை முதல்வர் பொறுப்பில் இருந்து இறக்க, கடும் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை, நெருக்கடிகள் இன்னும் கூடுதலானால் பன்னீர்செல்வம் சட்டசபையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவும் கூடும். அ.தி.மு.க.- எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மொத்தமாக, அவருக்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என வைத்துக் கொண்டால், அ.தி.மு.கவுக்கு அடுத்த நிலையில் உள்ள தி.மு.கவைத்தான், அரசமைக்க கவர்னர் கூப்பிட்டாக வேண்டும். அவர்கள் பொறுப்பேற்கவில்லை என்றால் கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டு, தேர்தலைத்தான் சந்தித்தாக வேண்டும்.

அப்படியொரு நிலைக்கு சசிகலா ஒருபோதும் போக மாட்டார். இருக்கும் ஆட்சியையும் இழந்து விட்டு, அதனால் ஏற்படும் சிக்கல்களை அனுபவிக்க யார் அனுமதிப்பார்?

நம்பிக்கை வாக்ெகடுப்பில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்று விடுகிறார் என வைத்துக் கொள்வோம். அடுத்த ஆறு மாதங்களுக்கு பன்னீர் மீண்டும் நம்பிக்கைவாக்கு கோர வேண்டியதில்லை.

அதனால் எப்படிப் பார்த்தாலும் பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர்ந்துதான் ஆக வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் இரு தரப்புக்கும் ஏற்பட்டிருப்பதுதான் நிலைமை.

அதைத் தெரிந்து கொண்டுதான், அமைச்சர்கள் சிலரை பன்னீருக்கு எதிராகத் தூண்டி விட்டு, அவரை ராஜினாமா செய்யக் கோரியவர்கள் திடீர் என அமைதியாகி உள்ளனர்.

பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக தனது பொறுப்பை ராஜினாமா செய்து விடுகிறார் என வைத்துக் கொள்வோம். பன்னீர்செல்வம் சசிகலா அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் சில காலம் வைத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் தூக்கி எறியப்பட்டால், பன்னீரின் நிலைமை என்னாகும்?

அப்படி பன்னீர்செல்வம் முதல்வராக இல்லாத நிலையில் மத்திய அரசு சும்மா இருக்குமா? ஏற்கனவே, சேகர் ரெட்டியிடம் தொடர்புடையவராக அறியப்பட்ட பன்னீர்செல்வத்துடனான தொடர்புகள் அனைத்தும் சேகர் ரெட்டியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் மத்திய அரசு அதை கையில் வைத்திருக்கும்போது, அதை வைத்து மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டால், பன்னீர்செல்வத்தால் தாங்க முடியுமா?

அதனால், ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று, பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் கடைசி வரை நீடித்துத்தான் ஆக வேண்டும். முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், சசிகலாவின் பாதம் தொட்டு வணங்குவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறாரே? சசிகலாவை அடிக்கடி சந்தித்து ஆட்சி, அதிகாரம் குறித்து விவாதிக்கிறாரே என்று எல்லோரும் அவர் மீதான சந்தேகக் கேள்விகளை எழுப்புகின்றனர்.

கேள்விகள் சரிதான். ஆனால் பன்னீர் போன்ற, புத்திசாலிகள் பணிவு காட்டி வளர்ந்தவர்கள். அவர்களைப் போன்றவர்கள் இப்படித்தான் தலையும் வாலும் காட்டிக் கொண்டிருப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.

இதேவேளை சசிகலாதான் முதல்வராகப் போகிறார் என அதிமுக நிர்வாகிகள் திடமாக நம்புகின்றனர். இந்த நிலையில் சசிகலா முதல்வராக வலியுறுத்தி அமைச்சர் பதவி, எம்பி பதவியை ராஜினாமா செய்யும் நாடகம் எப்போது வேண்டுமானாலும் அரங்கேறும் நிலை உள்ளது.

 


Add new comment

Or log in with...