ஆட்சிக் கவிழ்ப்புக் கனவு! | தினகரன்

ஆட்சிக் கவிழ்ப்புக் கனவு!

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்றது.

நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு 2020 வரையும் ஆணை வழங்கியுள்ளனர். அதேநேரம் இவ்வரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களின் பயனாக நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்கும் அதிகரித்துச் செல்கின்றது.-

இவ்வாறான சூழலில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை கடந்த 29 ஆம் திகதி சந்தித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, '2017 ஆம் ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பேன்' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

'இந்த அரசாங்கத்தை உருவாக்கிய இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அதனால் ஆட்சி நீடிக்க முடியாது' என்றும் அவர் கூறியுள்ளார்.

அதாவது நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐ. தே. க மற்று-ம் ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறு-ப்பினர்கள் சிலருக்கிடையில் கடந்த சில வாரங்களாக கருத்து- முரண்பாடுகளும் அபிப்பிராய பேதங்களும் ஏற்பட்டுள்ளன. அதன் காரணத்தினால் ஆளுக்கு ஆள் கடும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துக் கொண்டனர்.

இந்த சந்தர்ப்பம் தனக்கு சாதகமாக அமையும் எனக் கருதும் முன்னாள் ஜனாதிபதி,- இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எம். பிக்களைக் கவர்ந்து கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பில்தான் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதியான இவர், இந்த நாட்டை இரு தடவைகள் ஆட்சி செய்துள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் இவரை நிராகரித்தனர்.அந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் பெற்ற அனுபவங்களை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.

அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஒன்றுபட்டு ஆணை வழங்கினர். அந்த ஆணை 2020 வரையும் செல்லுபடியாகக் கூடியதாகும்.

அதனால் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதித்து செயற்பட வேண்டும். இந்நாட்டை ஏற்கனவே இரு தடவைகள் ஆட்சி செய்தவர் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி இந்த பொறு-ப்பிலிருந்து வெளியேறிச் செயற்பட முடியாது. இருந்தும் இவற்றைக் கருத்தில் கொள்ளாதுதான் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறிய சூடு தணிவதற்குள் ஸ்ரீ ல. சு. க. பொதுச்செயலாளரும், விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கா, 'இந்தக் கூற்று அதிகார போதையின் உச்சத்தையே வெளிப்படுத்துகின்றது' என்றார்.

'நல்லாட்சி அரசாங்கம் வலுவாகவே உள்ளது. அதனால் அவரது எதிர்பார்ப்பு சாத்தியமற்றது' என்று குறிப்பிட்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்கா, '2015.01.08 அன்று மக்கள் வழங்கிய ஆணையையும் ஜனநாயக விழுமியங்களையும் மதித்து நடக்க வேண்டியது அவரது பொறுப்பு' எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை, ஐ.தே.கவின் பிரதி தேசிய அமைப்பாளரும் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பாடல் அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ, 'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சியைக் கவிழ்க்கலாம் எனப் பகல் கனவு காணுகின்றார். எக்காரணம் கொண்டும் இவ்வரசாங்கம் மாறாது. 2017 இலும் அது மேலும் வலுவுடனேயே முன்னோக்கிப் பயணிக்கும்' என்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

இன்றைய ஜனநாயக அரசியல் சூழலில் என்ன செய்வது? என்ன பேசுவது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தட்டுத் தடுமாறித் திரிகின்றார்' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி-யின் இக்கூற்றை நாட்டின் பல தரப்பட்ட அரசியல் தலைவர்களும் விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அவரது கூற்றை நாட்டு மக்கள் வேடிக்கையானதாக நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் அவதானிகளும் தெரிவித்திருக்கின்றனர்

இவ்வாறான நிலையில் 2017 ஆம் ஆண்டில் புதுவருடக் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதன் நிமித்தம் அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முடிந்தால் அரசாங்கத்தை கவிழ்த்துக் காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்.

அதுவும் இம்மாதத்தின் நடுப்பகுதியில் தாம் வெளிநாடு செல்லவிருப்பதாகவும், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது அரசைக் கவித்துக் காட்டுமாறும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இந்த சவாலுக்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிற்கவே முடியாது. அந்தளவுக்கு வலுவான சவால் இது. இதனை உணர்ந்து கொள்ள வேண்டியது அவரது பொறுப்பாகும். ஆகவே மக்கள் அளித்துள்ள ஆணையை மதித்து, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக மக்கள் தனக்கு அளிக்கும் மரியாதையைப் பேணிக் காத்தபடி செயற்பட வேண்டியதே முன்னாள் ஜனாதிபதியின் பொறுப்பாகும். 


Add new comment

Or log in with...