வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதியின் கரிசனை | தினகரன்

வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதியின் கரிசனை

 

பூமி தொடர்ந்தும் உயிர்ப்புடன் நிலைத்திருப்பதற்கான சுவாசப்பைகளாக காடுகள் பங்காற்றுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

காடுகள் இன்றேல் உலகில் எந்தவொரு உயிரினமுமே வாழ முடியாமல் போய் விடும். தாவரவியலில் மரங்களை ‘தற்போசணிகள்’ என்றும் ‘உற்பத்தியாக்கிகள்’ என்றும் கூறுகின்றார்கள்.

தாவரங்கள் தமக்குரிய உணவை தாமாகவே தயாரித்துக் கொள்கின்றன. ஏனைய உயிரங்கிகளுக்கு இவ்வாறான ஆற்றல் கிடையாது. பூமியில் உள்ள இயற்கையான நீரையும் கனியுப்புகளையும் உறிஞ்சியெடுத்து, சூரியஒளியினதும் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட் வாயுவினதும் உதவியுடன் தாவரங்கள் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.

அவ்வுணவை தாவரங்கள் தமது உயிர்வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வதுடன் நின்று விடாமல் மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிர் அங்கிகளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவாக வழங்குகின்றன. எனவேதான் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்குமான உணவு உற்பத்தியாக்கிகளாக தாவரங்கள் விளங்குகின்றன. உலகில் மரம், செடி, கொடிகள் இல்லாது போனால் உயிர் வாழ்க்கையே அஸ்தமித்துப் போய் விடுமென்பது இதன் மூலம் புலனாகின்றது.

தாவரங்கள் உலக உயிரினங்களுக்கு உணவை மாத்திரம் வழங்குவதுடன் நின்று விடுவதில்லை. வளிமண்டலத்தைச் சீராக்கும் பெரும் காரியத்தையும் அவை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. உயிரினங்களின் சுவாசத்தினாலும், எரிபொருட்கள் எரிக்கப்படுவதாலும் வளிமண்டலத்தில் சேருகின்ற அசுத்த வாயுவான காபனீரொட்சைட்டை தாவரங்கள் உணவுத் தயாரிப்புக்காக (ஒளித்தொகுப்பு) உறிஞ்சிக் கொண்டு எமக்குரிய சுவாசத்துக்கான ஒட்சிசனை வழங்குகின்றன.

வளியைத் தூய்மையாக்கும் பெரும் பணியை காடுகளே ஆற்றுகின்றன. புவியில் வளியைச் சீராக்கும் பணியில் சுமார் இருபது சதவீதத்தை அமேசன் காடுகள் ஆற்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சுருங்கக் கூறுவதானால் காடுகளின் இருப்பில்தான் பூமியின் உயிர்வாழ்க்கையே தங்கியிருக்கின்றது. பூமியின் வெப்பத்தை சீராகப் பேணுதல், கிரமமான மழை வீழ்ச்சி, பிராணிகளின் வாழ்விடம், உணவு வழங்குதல் என்றெல்லாம் காடுகளின் பயன்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவ்வாறிருக்கையில், காடுகளின் பயன்களை அறியாமல் உலகெங்கும் காடழிப்பு வேகமாகத் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. மனிதன் தனது சுயநலம் காரணமாகவே எதிர்கால பாதகமான விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் காட்டு வளத்தை அழித்துக் கொண்டே வருகின்றான். உலகெங்கும் தொடருகின்ற இத்தகைய அநியாயத்துக்கு இலங்கையும் விதிவிலக்கு அல்ல.

இலங்கையில் காணப்பட்ட காடுகளின் அளவு கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் சுமார் அரைவாசியாகக் குறைந்து போயுள்ளது. விவசாயம், குடியிருப்புகள் அமைத்தல், மரக்கடத்தல் போன்ற பிரதான காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. யுத்தம் நிலவிய கால கட்டத்தில் புலிகள் தங்களது பாதுகாப்பு கருதி வன்னியில் காடுகளை உருவாக்கிய அதேவேளை, பாதுகாப்புப் படையினரோ தங்களது பாதுகாப்பு கருதி பெருமளவு காடுகளை அழித்தொழித்து விட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் தற்போதும் பெருமளவு காடுகள் அழிக்கப்படுவதாக தமிழ் எம். பிக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மலையகத்திலும் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு விட்டதனால் அங்கு சீதோசண நிலைமை வேகமாக மாற்றமடைந்து கொண்டு செல்கின்றது. வனப் பாதுகாப்பு தொடர்பான சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்த போதிலும் சட்டவிரோத காடழிப்பு தொடர்ந்தபடியே செல்கின்றது.

இத்தகையதொரு சூழ்நிலையில் வில்பத்து சரணாலய வனாந்தரம் அழிக்கப்பட்டு வருவதாகக் கடந்த ஓரிரு வருடங்களாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குடியேற்றத்துக்காகவும், மரக்கடத்தலுக்காகவும் வில்பத்து வனப் பிரதேசத்தில் ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு விட்டதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. வில்பத்து சரணாயல காடழிப்பானது அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதையும் காண முடிகின்றது. வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கையில் கண்டனங்கள் எழுகின்ற அதேவேளையில், அவ்வாறான எதுவுமே இடம்பெறவில்லையென மறுதரப்பு கூறுகின்றது. அப்பிரதேசத்தில் முன்னொரு காலத்தில் குடியிருந்து வெளியேறிய மக்களே தற்போது தமது காணிகளில் மீண்டும் குடியேறி வருவதாக முஸ்லிம் தரப்பில் கூறப்படுகின்றது.

இவ்விகாரத்திலுள்ள உண்மை நிலைமை எதுவென்பது இன்னுமே பகிரங்கப்படுத்தப்படவில்லையென்றே கூற வேண்டியுள்ளது.

இத்தகைய நிலையில், வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடி கவனம் எடுத்துள்ளார். வில்பத்து வனாந்தரமானது வனசீவராசிகள் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காடழிப்பு குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நடவடிக்கையினால் இருவிதமான பயன்கள் உள்ளன. வில்பத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி காணப்படுவதென்பது முதலாவது நன்மை. பக்ச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலைமை தெளிவுபடுத்தப்பட்டாலேயே இன ரீதியான முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி காண முடியும்.

மறுபுறத்தில் காட்டு வளங்களைப் பாதுகாப்பதற்கு இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வில்பத்து காடழிப்புக் குற்றச்சாட்டு உண்மையா அல்லது உண்மைக்குப் புறப்பானதா என்பதல்ல இங்கு முக்கியம். காட்டுவளம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுதான பிரதானம்.

உயிரினங்கள் ஆரோக்கியமான வாழ்வதற்கான இயற்கைச் சூழலை நாம் கவனமாகப் பேணுவதே முக்கியம். உயிர்கள் வாழ முடியாத பாலைவனமாக இலங்கையை மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கலாகாது! 


Add new comment

Or log in with...