தும்புக் கைத்தொழிலின் மூலம் கூடுதல் வருமானம் | தினகரன்

தும்புக் கைத்தொழிலின் மூலம் கூடுதல் வருமானம்

 

பாரம்பரிய கைத்தொழில் வரிசையில் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நல்லதொரு கிராக்கி இருப்பதனை நாங்கள் மறந்துவிட முடியாது. தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் ஒவ்வொரு பொருள் உற்பத்திக்கு பயன்படு த்தப்படுகிறது. இருந்த போதிலும் தும்புக்கைத்தொழிலுக்கு தென்னை மிகக் கூடுதலாக பயன் படுத்தப்படுகிறது.

இதன் மூலம் பாரம்பரிய முறையிலான சிறு கைத்தொழிலாளர்கள் கூடுதலான வருமானத்தைப் பெற்று வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இருந்து உபகரணங்கள் இல்லாது கையினால் அனைத்து பொருட்களையும் செய்து சந்தைப்படுத்தி வந்துள்ளனர். இப்போதும் சிலர் கையினால் சிறு கைத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் உபகரணங்களின் உதவியின் மூலம் தும்புக் கைத்தொழிலை செய்து வருகின்றனர்.

தும்புக் கைத்தொழிலில் குறிப்பாக கயிறு திரித்தலும், நிலத்தை சுத்தப்படுத்துவதற்கு பயன் படுத்தப் படும் தும்புத்தடியும் பிரதானமானதாகும். இருந்தபோதிலும் தென்னையில் இருந்து கிடைக்கும் தேங்காய் எமது உணவு சமைப்பதற்கும், எண்ணெய் தயாரிப்பதற்கும், அதன் சிரட்டை அடுப்பில் தீ மூட்டுவதற்கும், மட்டை - தும்புக்கும் இதன் மூலம் கயிறு மற்றும் தும்புத்தடி செய்வதற்கும், தென்னஞ்சோறு மரங்களிற்கு உரமாகவும் பயன் படுத்தப்படுகிறது.

அது மட்டுமல்லாது தென்னை மரம் வீட்டின் கூரை போடுவதற்கும், ஓலை, வீட்டின் கூரைக்கும், ஈர்க்கில் ஈர்க்கிற் தடிக்கும் என்று பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இலங்கையின் குருணாகல் பிரதேசத்தில் பிரபல்யம் பெற்ற ஒரு தொழிலாக தும்புக்கைத்தொழில் திகழ்ந்துவருகிறது.

அதே போன்று தற்போது அம்பாரை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் தும்புக் கைத்தொழிலில் அனேக மானவர்கள் ஈடு பட்டு வருகின்றனர். இதன் மூலம் குறிப்பிட்டளவு வருமானத்தையும் பெற்றுவருகின்றனர். ஆரம்ப காலத்தில் இருப்பிடங்கள் முதல் வேலிகள் வரை தென்னை ஓலை யினால் பின்னப்பட்ட கிடுகுகளும் அதனை கட்டுவதற்காக கயிறுகளும் பிரதானமாக பயன்படுத்த ப்பட்டு வந்தது.

படிப்படியாக அபிவிருத்தியடைந்த பிறகு வீடுகளின் கூரைகளுக்கு ஓடுகளும், வேலிகளை சீமெந்துக் கற்களாலும் நிர்மாணித்து வருகிறார்கள். கிடுகளால் வேயப்பட்ட வீடுகளை யோ அல்லது கிடுகளினால் ஆன வேலிகளையோ இப்போது காணமுடியாது என்றுதான் சொல் லலாம். இதனால் தென்னை ஓலையினால் பின்னப்பட்ட கிடுகளுக்கு கிராக்கியும், சந்தைவாய்ப்பும் இல்லாமல் போய்யுள்ளது.

இருந்தபோதிலும் ஏனைய உற்பத்திகளுக்கு கிராக்கி குறையவில்லை. தும்பு சார்ந்த கைத்தொழில்களுக்கு கூடுதலான சந்தைவாய்ப்பு இப்போதும் இருந்துவருகிறது. ஆனால் தும்புக்கைத்தொழிலில் அல்லது தென்னை சார்ந்த பொருட்களினைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுகிறது. ஆரம்ப காலம்முதல் அவை வளர்ச்சியடையாமல் குறைந்தளவிலான வேகத்திலேயே நடைபெற்றுவருகிறது.

இலங்கையின் சில பிரதேசங்களில் மிகக் குறைந்தளவிலான தொழிலாளர்களைக் கொண்டு சிறியளவிலான தொழிற்சாலைகளை அமைத்து மேற்படி கைத்தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் வருமானமும் விருத்தியடைந்ததாக தெரியவில்லை தங்களது வாழ்க்கை யை நடாத்துவதற்கு ஒரு தொழில் தேவை அதற்காக தும்புக்கைத்தொழிலை விடாது மேற்கொண்டு வருகி ன்றனர். சிலர் தொழிலை விருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது ஆனால் அதற்குரிய முதலீடு இல்லை அவற்றை பெறுவதிலும் பாரிய சவால் நிறைந்ததாக காணப்படுகிறது இதனால் விருத்தி செய்ய முடியாது என்ற ஒரு நிலையிலும் இத் தொழிலாளர்கள் இருந்து வருகி றார்கள். கூடுதலாக கிராமப் புறத்தில் வசிக்கும் மக்கள் இத் தொழிலை நம்பித்தான் வாழ்ந்து வருகி றார்கள்.

தும்புக் கைத் தொழிலுக்கென்று பயிற்சிகள் வழங்கப்படுவது என்பது மிக மிகக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள் தங்களது பரம்பரையில் யாராவது கற்றிருந்தால் அவர்களின் வழியாகவே இவர்கள் ஈடு பட்டுவருகிறார்கள்.

தும்புக் கைத்தொழிலுக்கென்று எமது சந்தையில் நிலவும் கேள்விக்கேற்ப அவை அபிவிருத்தி செய்யப்படவேண்டும். அக் கைத்தொழிலில் ஈடுபட்டுவருபவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்படும்போது ஏனையவர்களுக்கும் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் ஆர்வமும் ஏற்படும் அதன்போது தும்புக் கைத்தொழிலும் விருத்தியடையும். எமது நாட்டில் பல தொழில் பயிற்சி நிலையங்களில் பல வகையான தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுவரும் வேளையில் எமது கிராமத்தில் எமது வீட்டிலிரு ந்தவாறே செய்யக்கூடிய ஒரு தொழிலான தும்புக்கைத்தொழிலை பயிற்சி நெறியில் சேர்த்துக்கொண்டால் பாரிய ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தற்போது தும்புக்கைத்தொழில் சிறியளவிலான தொழிற்சாலை அம்பாரை மாவட்டத்தின் மருதமு னை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. அவற்றுக்கான நல்ல சந்தை வாய்ப்பும் உள்ளது. மாதாந்தம் ஒரு நிலையான வருமானம் ஒன்றை பெற்றுக் கொள்ள இத் தொழில் கை கொடுக்கிறது.

மருதமுனை பிரான்ஸ் சிற்றி என்ற ஒரு பிரதேசத்தில் ஏ.எம்.மனார்தீன் என்பவர் சுமார் பத்து வருடகால மாக தும்புக்கைத்தொழிலை தனது தொழிலாக மேற்கொண்டுவருகிறார். இவர் தனது 25வது வயதில் தும்புக் கைத்தொழிலில் ஈடுபடத்தொடங்கியவர், இப்போது இவருக்கு வயது 37 தும்புக் கைத்தொழில் தொடர்பான பயிற்சியை குருணாகல் தும்புத்தொழிற்சாலை ஒன்றில் பெற்று ள்ளார்.

அதன் பின்னர் இவருடைய பிரதேசமான மருதமுனையில் தனது மாமாவான 63 வயதுடைய ஐ.எல்.எம். ஜமால்டீன் என்பவருடன் இணைந்து சிறியளவிலான 4 உபகரணங்களுடன் தொழிலை ஆரம் பித்து கயிறு திரித்தல், தூப்பந்தடி தயாரித்தல், ஈர்க்கிற்தடி தயாரித்தல், தென்னஞ் சோறு தயாரித்தல் போன்றவைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் ஏற்றுமதி அபிவிருத்திச்சபை, தொழிற்துறை திணைக்களம் என்பனவற்றிலும் பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனமான யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உதவி இவருக்கு கிடைத்துள்ளது. அவர்கள் தும்புக்கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். இவ் உதவி இவரது தொழிலில் மீண்டும் ஒரு தடைக்கல்லைத் தாண்டி செல்லும் அளவிற்கு உதவியுள்ளது.

குறிப்பாக கட்டட வசதி, உபகரணங்கள், சந்தைப்படுத்துவதற்கான வாகன வசதிகள் என்பனவற்றை மானியமாக வழங்கியுள்ளார்கள். இதற்குபின்னர் 20 உபகரணங்களுடன் சிறந்த முறையில் தொழில் ஒன்றை செய்து வருமானம் பெற்றுவருகிறார். இவரினால் சுமார் 30 தொழிலாளர்கள் இத் தொழிற் சாலையில் வேலை செய்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள விற்பனை நிலையங்களிற்கு விற்பனை செய்ய ப்பட்டு வருகிறது. தும்பினை பெறுவதற்கான தேங்காயின் உரித்த மட்டையினை ஒலுவில், காத்தான் குடி போன்ற பிரதேசங்களில் கூடுதலாகவும் ஏனைய அண்மித்த பிரதேசங்களிலும் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகிறது.

ஒரு லோடு உரிமட்டை 3500 ரூபா மதல் 5500 வரையும் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்படுகிறது. தெழிலாளி ஒருவர் 1 கிலோகிராம் கயிறு திரித்து அவற்றுக்காக 3 ரூபாவை பெறுகிறார். 100 முடிச்சி கயிறு திரித்துக் கொடுத்தால் 20 ரூபா வழங்கப்படுகிறது. மொத்தமாக மாதாந்தம் தொழிலாளி ஒருவர் 9 ஆயிரம் ரூபா சம்பளமாகப் பெறுகிறார். இது தவிர ஏனைய விசேட நாட்களில் தொழிலாளர்களுக்கு விசேட கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

1 சிறிய முடிச்சிக் கயிறு 5 ரூபாவிற்கும், பெரிய முடிச்சிக் கயிறு 60 ரூபாவிற்கும், தும்புச்சோறு ஒரு துண்டு 250 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1300 ரூபா ஒரு நாளைக்கும், ஒரு மாதத்திற்கு ஆகக் கூடியது 30 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஓரளவான தொழிற்சாலை என்றால் இதுவாகத்தான் இருக்கும்.

இவற்றை இன்னும் விருத்தி செய்து இன்னும் பலருக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டம் இவரிடம் இருந்த போதிலும் அவற்றை மேலும் விருத்தி செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார். அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உதவியை தவிர வேறு எதுவித உதவிகளும் கிடைக்காதுள்ளதுடன், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தொழிற்சாலை முற்ராக மூழ்கி அனைத்து உபகரணங்களும் சேதமடைந்தன.

இதன் போது எதுவித உதவிகளும் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தொழிலை மீண்டும் ஆரம்பிக்க பல இலட்சம் ரூபா நிதி தேவைப்பட்ட போதிலும் எங்கும் பெற முடியாது திண்டாடிய பின்னர் தனது காணி ஒன்றை விற்றே மீண்டும் தொழிலை ஆரம்பித்துள்ளார்.

எனவே இப்படியான தொழிலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படவேண்டும். அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள திவி நெகும வாழ்வின் எழுச்சித் திட்டம் ஊடாகவும் இப்படியான பாரம்பரிய சிறு கைத்தொழில்களை அபிவிருத்தி செய்ய உதவிகள் வழங்கப்பட்டால் அவை சிறு கைத்தொழிலை மேற் கொண்டுவரும் தொழிலாளர்களுக்கு பாரிய உதவியாகவும் அமையும். தொழில்வாய்ப்பும் அதிகரிக்கும்.

 

எம்.எல்.சரிப்டீன், ஆலையடிவேம்பு விசேட நிருபர்


Add new comment

Or log in with...