ஆட்சிக் கவிழ்ப்புச் சிந்தனை நல்லாட்சிக்கு தடையாகாது | தினகரன்

ஆட்சிக் கவிழ்ப்புச் சிந்தனை நல்லாட்சிக்கு தடையாகாது

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசின் ஆயுளை 2017ல் முடிவுக்குக் கொண்டுவரப்படுமெனவும் தமது ஒரே இலக்கு அடுத்தாண்டு முடிவுக்குள் அரசாங்கத்தை கவிழ்ப்பதே எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற போதிலும் பிரதான இரு கட்சிகளின் உறுப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டிருப்பதால் இந்த அரசால் தொடர்ந்து நீண்டகாலம் நிலைக்க முடியாதென்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் பிற்பட்ட காலத்தில் இன முரண்பாடுகள் அதிகரித்ததோடு இனங்களுக்கிடையே பெரும் பிளவுகளும் ஏற்பட்டன.

சிறுபான்மைச் சமுகங்கள் அன்று ஓரக் கண்கொடு பார்க்கப்பட்டன. அரசாங்கம் என்ற அடிப்படையிலோ, நாட்டின் தலைவர் என்ற விதத்திலோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இது குறித்து எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறினார். இதன் காரணமாக மக்கள் அவர் மீதும் அரசு மீது அதிருப்தியடைந்தனர். போதாக்குறைக்கு தனது ஆயுள்பூராவும் ஜனாதிபதியாக இருக்கக்கூடிய விதத்தில் அரசியலமைப்புத் திருத்தத்தையும் மேற்கொண்டார். இதனால் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு செல்லப்படக்கூடிய ஆபத்து நெருங்கி வந்தது.

இந்த நிலையில் 2014 இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தி மூன்றாவது தடவையாகவும் அவர் களமிறங்கினார். இந்தத் தேர்தல் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்குமிடையிலான போட்டியாகவே உலகளவில் ​நோக்கப்பட்டது. மகிந்தவின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து அவரது சுதந்திரக் கட்சியிலிருந்தே பலர் வெளியேறினர்.

சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த அன்றைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிரடி நடவடிக்கையாக அதிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை சற்றும் எதிர்பார்க்காத மகிந்த ராஜபக்ஷ ஆடிப்போனார்.

தேர்தலில் தான் எப்படியாவது வெல்லவேண்டுமென்ற அடிப்படையில் பல்வேறுபட்ட வியூகங்களை அமைத்துச் செயற்பட்ட போதும் அவை எதுவும் தேர்தல் களத்தில் எடுபடவில்லை. நாளுக்கு நாள் பொது வேட்பாளரின் வெற்றிப்பயனத்தின் பக்கமே மக்கள் இன, மத மொழி பேதமின்றி அணிதிரண்டனர்.

2015 ஜனவரி 8ல் நடந்த தேர்தலில் மகிந்தவை முற்றாக புறக்கனித்த மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை வழங்கினர். அதனை யடுத்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி 2015 ஆகஸ்டில் நல்லாட்சி மலர்ந்தது. எதிரும் புதிருமாக காணப்பட்ட இரண்டு பிரதான கட்சிகளும் ஏனைய சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து நல்லாட்சி தொடர ஆதரவளித்தன.

இந்தக் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஆனால் நல்லாட்சிப் பாதையில் அவை இடையூராக அமையவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நல்லாட்சிக்குத் தடைகளைப் போட மகிந்த தரப்பினர் பல்வேறுபட்ட வியூகங்களை தொடராக மேற்கொண்டு வருகின்றனர். அவை எதுவும் செல்லுபடியாகாத செல்லாக்காசுகளாகவே காணப்பட்டன.

அன்று இனவாத பிக்குகள் சிலரை தூண்டிவிட்டு சிறுபான்மைச் சமுகங்கள் மீது கட்டவிழ்த்திவிட்ட இனவெறியாட்டத்தை நடத்தியவர். இன்று அதற்கும் தமக்கும் எதுவித தொடர்பும் கிடையாதெனக் கூறி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றார். ராஜபக்ஷ குடும்பம் தான் பொதுபல சேனாவின் பக்கம் நின்றது என்பது வெள்ளிடை மலையாகும். இன்று அரசில் இருப்போர் மீது அந்தப் பழியை போட்டு அவர் தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றார்.

முரண்பட்ட கருத்துக்கொண்ட கட்சிகளை உள்வாங்கியுள்ள அரசில் இடையிடையே முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அந்த முரண்பாடுகள் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வழியாக அமையப்போவதில்லை. இரு தலைவர்களும் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது இந்த முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்வது பெரிய விடயமேயல்ல. அரசில் குறைபாடுகள் இல்லையென்று நாம் கூற முற்படவில்லை ஜனநாயக ஆட்சியில் இதுவொன்றும் புதுமையானதல்ல.

இந்த அரசு 2020 வரை நிலைத்திருக்கும் என்ற உறுதிப்பாட்டிலிருந்து எந்தவொரு கட்சியும் விலகி செல்லவில்லை. அன்று மகிந்த ஆட்சியில் இடம்பெற்றவைகளை வைத்துப் பார்க்கின்றபோது இந்த அரசு ஜனநாயக வழியிலிருந்து இம்மியளவும் விலகிச் செல்லவில்லை என்பதை அரசின் செயற்பாடுகளிலிருந்து வலுவாக புரிந்துகொள்ள முடிகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் மக்களால் ஓரங்கட்டப்பட்ட மகிந்த ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியிலும் இருத்து சிலரை விலைக்கு வாங்கும் ஒரு முயற்சியிலீடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் பலரும் பகிரங்கமாகவே தெரிவிதது வருகின்றனர்.

பதவி ஆசையும், பணத்தாசையும் பிடித்த சிலர் சிலவேளை மகிந்தவிடம் விலைபோகலாம். ஆனால் ஆட்சியை கவிழ்க்கும் சதிமுயற்சி ஒதுபோதும் வெற்றியடையப் போவதில்லை. ஜனநாயக வழி செல்லும் மக்கள் அதற்கு ஒருபோதும் இடைமளிக்கப்போவதில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

முரண்பட்டுள்ளவர்கள், அதிருப்திகொண்டவர்களை தம்பக்கம் இழுத்தெடுத்து ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்த மகிந்த புதிய வியூகத்தை அமைத்திருக்கிறார். இந்த வியூகமும் எந்தளவுக்கு வெற்றியளிக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மகிந்த ராஜபக்ஷவின் இந்த வியூகத்துக்கு எதிர்வரக்கூடிய உள்ளூராட்சித் தேர்தல் எத்தகைய சமிக்சையை காட்டப்போகின்றது என்பதும் முக்கியமானதாகும்.

சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டால் (தற்போது சிறிய பிளவு உண்டாகிவிட்டது) அத்தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாக அமையலாம. அதேநேரம் ஐ. தே. கவுக்குள்ளும் ஓரளவு வாக்கு வங்கிச் சரிவு ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகவே தென்படுகின்றது. இதனைச் சரிக்கட்டவேண்டிய கடப்பாட்டை கட்சித் தலைமை கொண்டிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் மகிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்புக்கனவு முழுமையாக நிறைவேறும் என எதிர்பார்க்க முடியாது. சிலவேளை 2020 வரை இதுபோன்ற அறிவிப்புகளும், அறிக்கைகளும் அவரால் விடுக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே நோக்கப்பட முடியும். 

You voted 'இல்லை'.

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...