புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்புமே அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் | தினகரன்

புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்புமே அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும்

 

அரசியலமைப்பைத் தயாரிக்கும் விடயத்தில் குறைபாடுகள் உருவாகும் பட்சத்தில் அவற்றை உள்ளிருந்து பேச்சுக்களைத் தொடர்வதன் மூலமும், கலந்துரையாடுவதன் மூலமுமே தீர்த்துக் கொள்ள முனைய வேண்டும். அதனை விடுத்து 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்ற விதத்தில் செயற்பட முனைவதால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது எட்டாக்கனியாகவே தொடரும். கடந்த காலங்களில் அசிரத்தையாகச் செயற்பட்டதன் காரணமாகவே பிரச்சினையானது புரையோடிப் போன புண்ணாகித் தொடர்கிறது. இருதரப்பும் ஏதோவொரு வகையில் விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட வேண்டியதே மிக முக்கியமானதாகும்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடக்கு_கிழக்கு இணைப்பு என்பன மறுக்கப்பட்டு, பௌத்த மதத்துக்கு முதலிடம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்திக் கேட்டுள்ளார். யாழ் ஊடக மையத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இக்கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் 21 பேர் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் உள்ளனர்.

இந்த வழிகாட்டல் குழு ஏற்கனவே பல சந்திப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் சமஷ்டி அமைப்பு முறை குறித்தோ, வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம் குறித்தோ, எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்குவதை அவர்கள் எதிர்க்கவில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார். தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலத்தில் பிரச்சினையை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியுமென நம்புவதாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டி இருந்தார்.

இத்தகையதொரு நிலையில்தான் வழிகாட்டல் குழுவிலிருந்து சம்பந்தனும், சுமந்திரனும் வெளியேற வேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரி இருக்கிறார். இந்தக் கோரிக்கை குறித்து தமிழ்த் தரப்புகள் மிக ஆழமாக யோசிக்க வேண்டும். திடீர் முடிவுகளை எடுப்பதால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் குறித்து எண்ணிப் பார்க்க வேண்டும். வெளியேறுவதை விட உள்ளிருந்து பேச முடியும். குரல் எழுப்ப முடியும். அதுதான் ஆரோக்கியமானதாகும்.

சம்பந்தனும், சுமந்திரனும் காரணமின்றி உள்ளே இருக்க மாட்டார்கள். ஆரோக்கியமான சில முடிவுகளை எட்ட வேண்டுமானால் பொறுமையுடன் செயற்பட வேண்டும். சில விட்டுக்கொடுப்புகளையும் செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்பு என்பது ஒரு தரப்புக்குரியதல்ல. இருதரப்புக்கும் பொதுவானது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியப்படக் கூடியதல்ல. அது ஆரோக்கியமானதுமல்ல. ஒற்றையாட்சியை நிராகரிப்பது, வடக்கு கிழக்கு இணைப்பு என்பன குறைந்தபட்சக் கோரிக்கை என ஏற்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

அப்படிச் செய்யும் போது உருவாகக் கூடிய நெருக்கடி நிலைகளை எண்ணிப் பார்த்தாக வேண்டும். பௌத்தத்துக்கு முதலிடம் வழங்குவதன் மூலம் ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அல்லது நிராகரிக்கப்பட்டதாகக் கொள்ள முடியுமா? பௌத்த மதத்துக்குரிய உரிமைகள் போன்று ஏனைய மதங்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படுவதை அரசு ஏற்கனவே உறுதி செய்திருப்பதை மறந்து விடக் கூடாது.

இவ்வாறான சூழ்நிலையில் அவசரப்பட்டு முடிவெடுப்பது ஆரோக்கியமானதல்ல. அரசியலமைப்பு அம்சங்கள் தயாராகும் போது உபவிதிகள் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த முடியும். அதன் போது சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பில் அவசியமான கோரிக்கைகளை முன்மொழியக் கூடியதாக இருக்கும்.

மேலோட்டமாகப் பார்க்கின்ற போது ஒன்றையாட்சி முறையை நிராகரிப்பதானது ஒட்டுமொத்த அரசியல் சாசனத்தையும் நிராகரித்ததாகவே கொள்ள முடிகிறது. ஒற்றையாட்சிக்குள் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒழுங்கு விதிகளை உள்வாங்கி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து செயற்படுவது வரவேற்கக் கூடியதாகும்.

எதிர்ப்பு அரசியல் என்பது ஆரோக்கியதானதாக இருக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையை நாடினால்தான் எல்லோரும் இன்புற முடியும். தொட்ட தற்கெல்லாம் எதிர்ப்பைக் காட்ட முனைந்தால் ஒருபோதும் நிரந்தரமான தீர்வை எட்ட முடியாது போகும். எதிர்க்கட்சித் தலைவரும், சமந்திரனும் வழிகாட்டல் குழுவிலிருந்து வெளியேறி விட்டால், அரசியலமைப்பு விடயம் தடைப்பட்டு விடப் போவதில்லை. ஆனால் பாதிக்கப்படப் போவது சிறுபான்மைச் சமுகங்களே ஆகும்.

வழிகாட்டல் குழுவில் தொடர்ந்து இருப்பது அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கே என்ற எண்ணப்பாங்கு கூட தவறான புரிதலாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் போன்றே ஏனைய கட்சிகளும் வழிகாட்டல் குழுவில் அங்கம் வகிக்கின்றன. அவையும் அரசைப் பாதுகாப்பதற்காகவா அங்கு இருக்கின்றன எனக் கேட்க வேண்டியுள்ளது.

வழிகாட்டல் குழுவிலிருந்து வெளியேற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் தமிழினத்தின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குறியாக்கும் முயற்சிகளாகும். தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் களையப்பட வேண்டும். அதற்கு இசைவான தீர்வு எட்டப்பட வேண்டும். அத்தகைய தீர்வு இன்றைய நல்லாட்சி அரசின் மூலமே சாத்தியப்பட முடியும். மற்றொரு சந்தர்ப்பம் கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டிருப்பதை உணர்ந்து சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறி வைக்கின்றோம். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...