நாட்டின் பொருளாதார சுபிட்சத்தை தாமதப்படுத்தும் நடவடிக்கை | தினகரன்

நாட்டின் பொருளாதார சுபிட்சத்தை தாமதப்படுத்தும் நடவடிக்கை

 

இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு நாட்டினதும் துரித அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடுகள் இன்றியமையாதவை. அந்த வகையில்தான் வெளிநாட்டு முதலீடுகள் தங்குதடையின்றி நாட்டுக்குள் வந்து சேருவதை உறு-திப்படுத்தி, நாட்டில் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கும் நன்னோக்கில் நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது.

ஏனெனில் இந்நாட்டில் காணப்படும் இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிருவாகத் தாமதங்கள் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வந்து சேருவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது.

முதலீடு செய்வதற்கான சிறந்த சூழல் இந்நாட்டில் காணப்பட்ட போதிலும், அதன் நிமித்தம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் தாமதங்களின் விளைவாக ஏற்கனவே பல வெளிநாட்டு முதலீடுகள் வேறு நாடுகளை நோக்கிச் சென்றுள்ளன. அவற்றில் பங்களாதேசம், தாய்வான், வியட்நாம் போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்கவை.

அதேநேரம் ஒரு சில முதலீட்டாளர்கள் 'முதலீடுகளை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையைப் போன்று வேறு நாடுகளில் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது' என்று ஏற்கனவே ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக யுத்தங்களுக்கு முகம் கொடுத்த நாடுகள் பல துரித அபிவிருத்திப் பாதையில் ஏற்கனவே பிரவேசித்துள்ளன. ஆனால் இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று ஏழு வருடங்கள் கடந்தும் கூட, இன்னும் இந்நாடு நிலைபேறான துரித அபிவிருத்திப் பாதையில் பிரவேசிக்கவில்லை. இதற்கு இங்கு காணப்படும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான இறுக்கமான சட்டங்களும் நிருவாகத் தாமதங்களுமே முக்கிய காரணமாகும்.

1980_ 1990 களில் பொருளாதார ரீதியில் இலங்கையை விடவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட பங்களாதேசம் இன்று பல்வேறு துறைகளிலும் இலங்கையை விடவும் வளர்ச்சியடைந்த நாடாக மாறியுள்ளனது. அந்தளவுக்கு அந்நாட்டில் வெளிநாட்டு முதலீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது துரித பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் மலேசியாவிலோ சிங்கப்பூரிலோ இலங்கையைப் போன்ற தாமதங்களைக் காண முடியாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி நாட்டை சிங்கப்பூர், மலேசியா போன்று அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு உள்ளது. அதற்கு வெளிநாட்டு முதலீடுகள் எவ்வித தாமதங்களும் இன்றி நாட்டுக்குள் வந்து சேர வேண்டும். தற்போதைய சூழலில் அது சாத்தியமற்றது.

ஏனெனில் நாட்டில் மிக இறுக்கமான சட்டங்களும், நிருவாகத் தாமங்களும் நிறையவே உள்ளன. தற்போதைய ஏற்பாடுகளின் கீழ் ஒரு துறை சாரந்த முதலீட்டுக்காக அங்கீகாரம் பெறுவதாயின் அத்துறை தொடர்பான அதிகாரிகளதும், அமைச்சரதும். அங்கீகாரத்தைப் பெறவே பல மாதங்களாகி விடுகின்றன.இந்நிலைமை மாற்றப்பட வேண்டும்.

அதனை அடிப்படையாகக் கொண்டுதான் வெளிநாட்டு முதலீடுகளின் வருகையைத் தாமதப்படுத்தக் கூடிய சட்டங்களையும் நிர்வாக செயற்பாடுகளையும் தவிர்ப்பதையும், இதன் நிமித்தம் சுப்பர் அமைச்சொன்றை ஸ்தாபிப்பதையும் பிரதான நோக்காகக் கொண்டு இந்த சட்ட ஏற்பாடு இம்மாத முற்பகுதியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதோடு மாகாண சபைகளது அங்கீகாரத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இச்சட்ட ஏற்பாட்டை வர்த்தமானியில் கண்ணுற்றதும் கடும் விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கிய மஹிந்த அணியினர், இது சர்வ வல்லமை பொருந்திய அமைச்சு என்றும், மாகாணங்களின் அதிகாரங்களை அபகரிக்கும் நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டினர். இதனைத் தொடர்ந்து இச்சட்ட மூலத்தை சந்தேகக் கண்கொண்டு நோக்கத் தொடங்கிய மாகாண சபைகள் அதனை எதிர்க்கவும் ஆரம்பித்துள்ளன.

இதன் விளைவாக கடந்த வாரம் ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்ட இச்சட்டம் வடக்கு, வட மத்தி, தென், மத்தி, சப்ரகமுவ, வட மேல் ஆகிய ஏழு மாகாணங்களிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களது முடிவும் இவ்வாறே அமையும் என்பதுதான் அரசியல் அவதானிகளின் கருத்து.

ஆனால் 2012 ஆம் ஆண்டில் திவிநெகும சட்ட மூலம் கொண்டு வரப்பட்ட போது நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதோடு ஐயங்களும் தெரிவிக்கப்பட்டன. அப்படி இருந்தும் அந்த சட்ட ஏற்பாட்டுக்கு அப்போது இயங்கிய எந்தவொரு மாகாண சபையும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக விருப்பமில்லாத நிலையிலும் அச்சட்டத்திற்கு அங்கீகாரத்தை வழங்கின. ஆனால் இன்று அவ்வாறான நிலைமை இல்லை. அதனால் மாகாண சபைகள் தம் நிலைப்பாட்டைச் சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றன. இது சிறந்த சூழ்நிலைதான்.

ஆனால் நாட்டின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்காக வெளிநாட்டு முதலீடுகளை தாமதமின்றி கொண்டு வரும் நோக்கில்தான் அரசாங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. எனினும் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் இவ்வாறான சட்ட ஏற்பாட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மாகாண சபைகளுடன் கலந்துரையாடி இருக்க முடியும்.

அவ்வாறான கலந்துரையாடலின் அடிப்படையில் இச்சட்ட ஏற்பாட்டைத் தயாரித்து அறிமுகப்படுத்தி இருந்தால் வீணான ஐயங்களைத் தவிர்த்து இச்சட்ட ஏற்பாட்டை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் இச்சட்ட ஏற்பாட்டை மாகாண சபைகள் தற்போது நிராகரித்திருப்பதால் நாட்டின் பொருளாதார சுபீட்சத்திற்கான நடவடிக்கைகள் தான் மேலும் தாமதமடைகிறது என்பது மட்டும் மறைக்க முடியாத உண்மையாக உள்ளது. 


Add new comment

Or log in with...