ரத்னசிறி ஒரு முன்மாதிரி | தினகரன்

ரத்னசிறி ஒரு முன்மாதிரி

 

இலங்கையின் முன்னாள் பிரதமரும், இந்நாட்டின் சிரேஷ்ட அரசியல் வாதியுமான ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று (27 ஆம் திகதி) காலமானார். சிறு காலம் சுகவீனமுற்றிருந்த இவர், தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தனது 83 வது வயதில் காலமாகியுள்ளார். இவரது இறுதிக் கிரியையகள் முழுமையான அரச மரியதையோடு இடம்பெறவுள்ளது.

இந்நாட்டு அரசியலில் சுமார் அரை நூற்றாண்டு காலம் பிரகாசித்த இவர், இந்நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி-களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள ஹொரணவில் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி பிறந்த இவர், தமது ஆரம்பக் கல்வியை மில்லேவ ஆரம்ப பாடசாலையிலும், அதனைத் தொடர்ந்து பன்னிப்பிட்டி-ய தர்மபால வித்தியாலயத்திலும், யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும், கொழும்பு ஆனந்த கல்லூரியிலும் கல்வி பெற்றார்.

அதன் பின்னர் பிரித்தானியா சென்ற இவர், லிங்ஸ் கல்லூரியில் இணைந்து சட்டத் துறையில் பரிஸ்டர் பட்டம் பெறக் கற்கைகளை மேற்கொண்டார். இந்த காலப்பகுதியில் இவர் இக்கல்லூரியின் இலங்கை மாணவர் தலைவராகவும் தெரிவானார்.

இதே காலப்பகுதியில் இவரது மூத்த சகோதரர் முதியான்ச மேல் மாகாண அரசியலில் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்தார். என்றாலும் அவர் 196-0 இல் காலமானார். அவரது மறைவின் நிமித்தம் தாயகம் திரும்பிய ரத்னசிறி விக்கிரமநாயக்க தீவிர அரசியலில் பிரவேசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் காரணத்தினால் பரிஸ்ட்டர் கற்கை நெறியின் இறுதி பரீட்சையில் அவரால் தோற்றக் கிடைக்கவில்லை.

மக்கள் ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான பிலிப் குணவர்தனவின் உரைகளால் பெரிதும் கவரப்பட்ட இவர், அக்கட்சியின் ஊடாகவே அரசியிலிலும் பிரவேசித்தார்.

அதனால் 1960களில் மக்கள் ஐக்கிய முன்னணியின் மேடைகளில் முன்னணிப் பேச்சாளராக விளங்கிய இவர், 1960 மார்ச்சியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

என்றாலும் 1962 இல் இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இறுதிவரையும் அக்கட்சியிலேயே அங்கம் வகித்தார். அத்தோடு கட்சியின் பல்வேறு பதவிகளையும் பொறுப்புக்களையும் கூட இவர் வகித்துள்ளார்.

அதேநேரம் 1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க. சார்பில் போட்டியிட்டு ஹொரண தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான இவர், மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான 1970 அரசாங்கத்தில் தான் முதன் முறையாகப் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1975 இல் இவருக்கு அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.

ஆனால் 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.க. ஆறில் ஐந்து அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹொரண தொகுதியில் ரத்னசிறி விக்கிரமநாயக்காவும் தோல்வி அடைந்தார். இருந்தபோதிலும் ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். இப்பதவியின் ஊடாகக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்காகப் பலவித வேலைத்திட்டங்களையும் இவர் முன்னெடுத்தார்.

இவ்வாறான நிலையில், 1994 இல் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரான ரத்னசிறி விக்கிரமநாயக்காவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு பாராளுமன்ற சபை முதல்வராகவும் இவரே நியமிக்கப்பட்டார். அதேநேரம் இவர் கட்சியின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

இவ்வாறான நிலையில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா 2000 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றதும் ரத்னசிறி விக்கிரமநாயக்கா இந்நாட்டின் 12 வது பிரதமராக 2-000.08.18 அன்று நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு வருட காலம் இப்பதவி​ைய வகித்த இவர், 2005 இல் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டு 2010 வரையும் இப்பதவியை வகித்தார். ஆனால் 1994 முதல் 2015 ஆம் ஆண்டு வரையும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.

சுமார் 55 வருடங்கள் பாராளுமன்ற அரசியிலில் ஈடுபட்டுள்ள இவர் தம்மைத் தெரிவு செய்த ஹொரண உள்ளிட்ட களுத்துறை மாவட்ட மக்களுக்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டுக்கும் பலவித சேவைகளை ஆற்றியுள்ளார். இவரது பல சேவைகள் மக்கள் மனங்களில் அழியாத் தடம் பதித்துள்ளன. குறிப்பாக சிறு தேயிலைத் தோட்டத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக இவர் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

அதேநேரம் கடமையில் நேரம் தவறாது ஈடுபடல், நேர்மை தவறாமை, வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல், எல்லோருடனும் புன்முறுவலுடன் பழகுதல், எவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மிகத் தெளிவாக கம்பீரமான குரலில் உரையாற்றுதல் என்பன இவரிடம் காணப்பட்ட விஷேட பண்புகளாகும். அத்தோடு தலைமைக்கு கட்டுப்படுவதில் அதிக சிரத்தை எடுக்கக் கூடியவராக இருந்தார். அதேநேரம் பயங்கரவாதம் தொடர்பில் கடும் போக்கைக் கையாண்டார்.

எனினும் அவரது மறைவு அவரது உறவினர்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் ஹொரண தொகுதி உள்ளிட்ட களுத்துறை மாவட்ட மக்கள் மற்றும் நாட்டு மக்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர் விட்டு சென்றுள்ள நற்பண்புகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் நல்ல முன்னுதாரணம் என்பதில் ஐயமில்லை. 


Add new comment

Or log in with...