அரிசி விநியோகத்தை சீராக்க அவசர திட்டம் | தினகரன்

அரிசி விநியோகத்தை சீராக்க அவசர திட்டம்

 

* 10,000 மெ.தொன் அரிசி இறக்குமதி
* 20,000 மெ.தொன் நெல் கொள்வனவு
* சதொசவில் கிலோ ரூ.78க்கு விற்பனை

அரிசி விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் சந்தையில் பேணும்வகையில் புதிய அரிசியை லங்கா சதொசவின் ஊடாக பாவனைக்கு விடுவதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை மட்டத்திலான குழு கடந்த (14) கூடியபோது 250,000 மெட்ரிக்தொன் அளவிலான புதிய அரிசியை இறக்குமதி செய்து சந்தையில் இருக்கும் கேள்வியை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவின் முடிவுக்கிணங்க 10,000 மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் 20,000 மெட்ரிக்தொன் (வெள்ளை மற்றும் நாடு) நெல்லை நெற் சந்தைப்படுத்தும் திணைக்களத்திலிருந்து கொள்வனவு செய்து, அதனை அரிசியாக்கவும் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு

(CWE) அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொள்வனவு செய்யப்படும் நெல்லை தனியார் ஆலைகள் மற்றும் அரச ஆலைகள் ஊடாக குற்றி அதனை அரிசியாக்கி லங்கா சதொச கிளைகள் மூலம் 78 ரூபாவுக்கு நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தைப் பணித்துள்ளார்.

அமைச்சரின் பணிப்புரைக்கிணங்க இந்த செயற்பாடுகளை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இன்று தொடக்கம் (20) ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மேற்குறிப்பிட்ட அரிசி லங்கா சதொசவினூடாக பாவனைக்கு விடப்படுமெனவும் இதன் மூலம் புத்தாண்டு தினங்களில் அரிசியை தாராளமாக நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.

அமைச்சர் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் எந்த சந்தர்ப்பத்திலும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவ அரசாங்கம் இடமளிக்காதென்றும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்கால பகுதியில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடிய விலையில் அரிசி விற்பனை செய்வதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது. நாடுமுழுவதிலும் இவ்வாறு அரிசி விற்பனை செய்வோரை முற்றுகை இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நுகர்வோர் சேவை அதிகாரசபையின் விதிமுறைகளை மீறிசெயற்படும் வர்த்தகர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சுஐப்.எம்.காசிம்

 


Add new comment

Or log in with...