நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட சினிமா படத்திற்கு எதிர்ப்புத்
தெரிவித்து அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில்
நேற்று (18) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்கான அழைப்பை இஸ்லாமிய வாலிபர் அமைப்பு விடுத்திருந்தது.
இப்பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு அதிகமான மாணவர்கள் செல்லாததனால் பாடசாலைகள் பல
இயங்கவில்லை. அரச, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில்
ஆங்காங்கே டயர்கள் எரிக்கப்பட்டு வீதித் தடைகள் போடப்பட்டிருந்தன.
நீண்ட தூர போக்குவரத்துகள் இடம்பெற்றாலும் உள்ளூர் போக்குவரத்துகள் மந்தகதியில்
காணப்பட்டன. முஸ்லிம் பகுதிகளில் கடையடைப்பு செய்து அமைதியாக தமது எதிர்ப்பை
தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, தைக்காநகர் போன்ற பகுதிகளில்
பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
‘அமெரிக்காவே மதங்களைத் தூசிக்காதே, இஸ்லாமியரை அவமதிக்காதே, அடக்கு முறையில்
நசுக்க முயலாதே, முஸ்லிம்களின் பொறுமையை கோழைத்தனமாக கருதாதே’ போன்ற சுலோகங்களை
ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் அக்கரைப்பற்று பட்டினப் பள்ளியில் ஆரம்பித்த மக்கள் எதிர்ப்பு பேரணி
மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்றடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள்
கலந்துகொண்டதுடன் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.