ஏழு மாடிகளைக் கொண்ட வாகன தரிப்பிட கட்டடம் ஒன்று இலங்கை மத்திய வங்கி வளாகத்தில்
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
நூறு வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வகையில் சகல வச திகளையும் கொண்டதாக
இந்த கட்டடம் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 130 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்படவுள்ள இந்தக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுக்காலை
இடம்பெற்றது.
மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதம
அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நட்டிவைத்தார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, போக்குவரத்து அமைச்சின்
செயலாளர் தம்மிக்க பெரேரா, கொழும்பு பிரதேச செயலாளர் கமல் பத்மசிறி, நகர அபிவிருத்தி
அதிகார சபையின் தலைவர் நிமல் பெரேரா மத்திய வங்கி பிரதி ஆளுநர் பி.டி.டபிள்யு.டி.
சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
1996 ஆம் ஆண்டு புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட இடத்திலேயே இந்த ஏழு
மாடிகளைக் கொண்ட வாகன தரிப்பிட கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.