ஏ9 வீதியில் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை வீதிப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று
வருவதால் இவ்வீதியின் ஊடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் கவனமாக வாகனங்களைச்
செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வீதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் குறித்து சாரதிகள் கவனம்
செலுத்துவதுடன், இந்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வேலையாட்களின் பாதுகாப்புக்
குறித்தும் சாரதிகள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் வடமாகாண சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபர் காமினி.டீ.சில்வா விடுத்திருக்கும் அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
நிர்மாணப் பணிகள் காரணமாக ஏ9 வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சமிக்ஞைப்
பலகைகளுக்கு மதிப்பளித்து சாரதிகள் செயற்பட வேண்டும் என்றும், வீதி மீறல்கள் மற்றும்
சட்டமீறல்களில் ஈடுபடும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அதேநேரம், ஏ9 வீதியின் இரு
மருங்கிலும் அடர்ந்த மரங்கள் காணப்படுவதால் வீதிக்குக் குறுக்காக விலங்குகள்
செல்லக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் அது குறித்தும் அவதானமாக இருக்குமாறும் அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதியின் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துவது மற்றும் மதுபோதை அல்லது சுகவீனமுற்ற
நிலையில் வாகனங்களைச் செலுத்துவதையும் தவிர்க்குமாறும் வடமாகாண சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபர் காமினி.டீ.சில்வா விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டு ள்ளது.