ஐ.நா சபையுடன் பொதுநலவாய அமைப்பைச் சமப்படுத்த முடியாது
ஐ.நா சபையுடன் பொதுநலவாய
அமைப்பைச் சமப்படுத்த முடியாது
நாடுகள் அனைத்தும் சுயாதீனமாக இயங்கக் கூடியவை
உள் விவகாரங்களில் எவரும் தலையிட முடியாது
கே.அசோக்குமார், எம்.எஸ்.பாஹிம்
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் பொதுநலவாய நாடுகளின் அமைப்பைச் சமப்படுத்த முடியாது.
பொதுநலவாய நாடுகளில் உள்ள நாடுகள் அனைத்தும் சுயாதீனமாக இயங்கக் கூடியவை. எந்த ஒரு
நாடும் மற்றைய நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாதென
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட ஊடகப்
பிரிவில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.
நேற்று மனித உரிமைகள் தொடர்பான அமர்வின்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்று
பொதுநலவாய நாடுகளுக்குத் தனியாக விசேட ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என ஆலோசனை
முன்வைக்கப்பட்டது. சில மேலைத்தேய நாடுகள் ஐ.நா. போன்றே பொதுநலவாய அமைப்பும் இருக்க
வேண்டும் என்ற தொனிப்பட பேசியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையிலே அமைச்சர்
இக்கருத்தை வெளியிட்டார்.
அமைச்சர் மேலும் இங்கு கூறியதாவது, இந்த அமைப்பை ஐ.நா. போன்று மாற்றுவது மிகவும்
ஆபத்தானதாகும். இது சுயாதீனமாக நாடுகள் இணைந்துள்ள அமைப்பாகும். இதற்கு சட்ட
வரம்புகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான கலாசாரம்
உள்ளது. ஒரு நாட்டிற்கு மற்ற நாட்டின் விடயங்களில் தலையிட முடியாது. ஒரு நாட்டின்
உள்ளக விடயத்தில் தலையிட்டால் அதனால் இந்த அமைப்பின் இருப்புத் தொடர்பில் பெரும்
பிரச்சினை எழும். உலக பொலிஸ்காரனாக மாற எந்த நாட்டிற்கும் முடியாது.
இதிலுள்ள நாடுகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றவை. எனவே மீண்டும்
காலனித்துவ ஆட்சி தேவையில்லை.
எதிர்காலத்திற்கு உகந்தவாறு பொதுநலவாய அமைப்பை மாற்றுவதே இம்முறை தொனிப்பொருளாகும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தமது பிரச்சினையை தாமாகத் தீர்வு காண உரிமை உள்ளது. இதனை
பொதுநலவாய அமைப்பு அங்கீகரிக்கிறது.
இலங்கை குறித்து தெரிவிக்கப்படும் தவறான அபிப்பிராயங்கள் தொடர்பில் சர்வதேச
நாடுகளிக்கு நேரில் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறுகையிலேய 3
மாகாணங்களுக்கான தேர்தல் நடந்தது. இடைக்கிடை தேர்தல் நடைபெறுவதினூடாக அரசாங்கத்தின்
கொள்கைகள் குறித்த மக்களின் கருத்தினை அறிய முடியும்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இங்கு வருவது குறித்து ஏழுப்பப்பட்ட கேள்விக்குப்
பதிலளித்த அவர், இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே அவருக்கு
இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றிருந்தார். அவரின்
வருகைக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றார்.