ஹிஜ்ரி வருடம் 1433 ஷவ்வால் மாதம் பிறை 26
நந்தன வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,SEPTEMBER, 13, 2012
வரு. 80 இல. 2187
 
முறையானதும் செயற்திறனுமுடைய பொது போக்குவரத்து நாட்டிற்கு அவசியம்

முறையானதும் செயற்திறனுமுடைய பொது போக்குவரத்து நாட்டிற்கு அவசியம்

முறையானதும், செயற்திறன் வாய்ந்ததுமான பொது போக்குவரத்து முறைமை ஒன்றை நாட்டிற்குள் ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்து அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது வாகன தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் நடைபாதைகளை அமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக் காட்டினார்.

150 மில்லியன் ரூபா செலவில் இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சகல நவீன வசதிகளைக் கொண்ட ஏழு மாடி வாகன தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுக் காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில் :- முறையான வாகன தரிப்பிடம் இல்லாதது கொழும்பு நகரில் பாரிய குறைபாடாக காணப்படுகின்றது. சகல இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நகரை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் போது பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலான நடைபாதையும் மிகவும் அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகமாக இலங்கைக்கு அழைக்கும் நிலையில் இதுபோன்ற வாகன நெரிசல், வாகன தரிப்பிடம், நடைபாதை போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுதல் மிக முக்கியமான ஒன்றாகும்.

கொழும்பு நகரில் வாகன நெரிசல்கள் ஏற்படுவதால் வீதியிலேயே நேரங்கள் வீணாக கழிக்கப்படுகின்றது. இதனால் வேலைகளும் தாமதமாகவே முடிக்கப்படுகின்றன.

நாடொன்றுக்கு செல்லும் போது அந்த நாட்டின் போக்குவரத்து வசதிகள், சுத்தம், சுகாதாரம் மற்றும் பொதுவசதிகள் தொடர்பிலே அவதானிப்போம். அது நன்றாக அமையும் பட்சத்தில் அது தொடர்பில் பேசுவோம். அதேபோன்றே சிறந்ததாக இலங்கையை மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால் உரையாற்று கையில் :- ஆசியாவின் மிகவும் அழகான நகரமாக தற்பொழுது கொழும்பு நகர் மாறி வருகின்றது.

கொழும்பு நகர் தற்பொழுது சகல துறைகளிலும் முன்னேற்றப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் பாரிய பங்களிப்புக்களை வழங்கி வருகிறது.

இதற்காக பாதுகாப்புச் செயலாளருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றோம்.

யுத்தத்திற்கு பின்னர் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் மூலம் முன்னேறி வரும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்திய வங்கி பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

இலங்கையின் சகல பிரதேசமும் சுத்தமான இடமாக மாறி வருகிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்கள் அபிவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு அது நாட்டின் நலனுக்கு பயன்படுத் தப்படுகிறது.

மத்திய வங்கியும் தனது செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் மேலும் விஸ்தரிக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி