ஹிஜ்ரி வருடம் 1433 ஷவ்வால் மாதம் பிறை 26
நந்தன வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,SEPTEMBER, 13, 2012
வரு. 80 இல. 2187
 
பொதுநலவாய பிரதிநிதிகள் குழு இன்று வட பகுதிக்கு விஜயம்

பொதுநலவாய பிரதிநிதிகள் குழு இன்று வட பகுதிக்கு விஜயம்

  • 60ழ பேர் கொண்ட குழு செல்ல விசேட விமானம்

  • யாழ். முல்லை, கிளிநொச்சி நிலைமைகளை நேரில் கண்டறிய வசதி

  • பிரிட்டிஷ் பிரதிநிதிகளுக்கு பிரத்தியேக ஏற்பாடு

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள 60 வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (13 ஆம் திகதி) வட பகுதிக்கு விஜயம் செய்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று யுத்தத்திற்கு பின்னரான உண்மையான நிலைமைகளை நேரில் கண்டறிய உள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பிரிட்டன் மற்றும் கனடா பாராளு மன்றத்தைச் சேர்ந்த சில எம்.பிக்கள் இறுதி யுத்தம் நடைபெற்ற இடங்களை மாத்திரம் காண்பதற்காக தனியாக அங்கு செல்ல உள்ளதாகவும் இதற்கு எதுவித தடையும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், ஏற்கனவே தீர்மானம் எடுத்துவிட்டு வடக்கிற்கு செல்வதில் பிரயோசனமில்லை. திறந்த மனதுடனே அங்கு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள விசேட ஊடகப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர்மேலும் கூறியதாவது :-

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டு பிரதிநிதிகளுக்கு இலங்கையின் உண்மை நிலையை நேரில் கண்டறிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் சில பிரதேசங்களுக்கு இன்று செல்ல உள்ளதோடு வடபகுதிக்கு செல்ல விரும்பும் 60 பேர் இன்று அங்கு செல்கின்றனர்.

யுத்தத்தின் பின்னரான கடந்த 3 வருட காலத்தில் வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வீதி, வீட்டு வசதி, பாடசாலை அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதி அடங்கலான சகலவற்றையும் நேரில் காண அவகாசம் வழங்கப்படும்.

ஆனால் ஓரிரு பிரதிநிதிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பாராது யுத்தம் நடந்த பகுதிகளை மாத்திரம் பார்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

அவர்கள் அங்கு செல்ல தடை கிடையாது. நாம் எதனையும் மறைக்க முயலவில்லை யுத்தம் நடந்த பகுதி மட்டுமன்றி அபிவிருத்தி குறித்தும் பார்வையிடுமாறே அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி