கபினியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து
அதிகரிப்பு
கபினியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து
அதிகரிப்பு
காவிரி டெல்டா பாசனத்தில் முக்கிய பங்கு வகிப்பது மேட்டூர் அணை இந்த ஆண்டு போதிய
தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில்
வருகிற 17 ஆம் திகதி முதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு
உள்ளார்.
இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக
கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து கபினியில் இருந்து வினாடிக்கு
5450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் கடந்த ஒரு வார காலமாக வந்து கொண்டு
இருக்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வந்தது. மேலும் தமிழக நீர்பிடிப்பு
பகுதிகளில் பெய்து வரும் மழை நீரும் சேர்ந்து வந்ததால் நீர் வரத்து அதிகமாக இருந்தது.
இந்நிலையில் தமிழகத்துக்கு நேற்று முதல் 20 ஆம் திகதி வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன
அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே மழைதீவிரம் அடைந்து இருப்பதால் கபினி அணைக்கு நீர் வரத்து நேற்று
முன்தினம் 17 ஆயிரத்து 788 கன அடியாக இருந்தது. இதையடுத்து காவிரியில் திறந்து
விடப்படும் தண்ணீர் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.