ஹிஜ்ரி வருடம் 1433 ஷவ்வால் மாதம் பிறை 26
நந்தன வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,SEPTEMBER, 13, 2012
வரு. 80 இல. 2187
 
எலும்புகளை பாதுகாக்காவிடின் நாற்பது வயதுக்குப் பின்னர் துன்பம்

எலும்புகளை பாதுகாக்காவிடின் நாற்பது வயதுக்குப் பின்னர் துன்பம்

ஓடியே பழகிவிட்ட நமக்கு உடம்பில் உள்ள எலும்புகள் எதற்காக உள்ளன, அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற காரணங்களை சிலர் காது கொடுத்து கேட்பதற்கு கூட நேரம் இருக்காது.

உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனை உபயோகப்படுத்தி கொள்ளும் வகையில் கடவுள் நமக்கு அதனை உருவாக்கியுள்ளார். இந்த அனைத்து எலும்புகளும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தனது பங்கை செவ்வனே செய்து வருகின்றன.

நாம் இந்த மொத்த எலும்புகளையும் பாதுகாக்க எடுத்து கொள்ளும் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மிக முக்கியமாகும். இந்த மொத்த எலும்புகளும் உடம்பில் உள்ள பகுதிகளுக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக் கொண்டு மனிதனுக்கு உடல் கட்டமைப்பை கொடுக்கின்றன.

எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் உள்ள மிக உறுதியான பகுதிகளாகும். மற்ற உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகள் மிக முக்கிய பணியை செய்து வருகின்றன. அதாவது எடுத்துக்காட்டாக மூளை, இருதயம், சிறுநீரகம், சுவாசப்பை போன்ற பகுதிகள் எலும்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட கூடுகளில் மிக பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.

அதனால் தான் மனிதன் எலும்புகள் மட்டும் சேர்ந்தவற்றை மனித எலும்புக்கூடு என்கிறோம். அதாவது மூளை மண்டை கூட்டிற்குள்ளும், இருதயம், சுவாசப்பை, நெஞ்சு கூட்டிற்குள்ளும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது போன்ற பாதுகாப்புகளை நமக்கு அளிக்கின்ற எலும்புகள் விபத்துக்களின் போது சில நேரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உடைகின்றன. இதனை பெரும்பாலும் குணப்படுத்த நவீன மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை எளிதில் சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.

இதனைப் போன்று இன்னும் பல்வேறு நோய்கள் மனித எலும்புகளை பாதிக்கின்றன. அதில் சமீப காலமாக அனைவரையும் பயமுறுத்தி வரும் பாதிப்பு எலும்பு தேய்மானம். இதை ஒரு நோய் என்பதை விட குறைபாடு என்பது மிகவும் பொருந்தும். அதாவது மனிதன் முதுமை அடையும் போது ஏற்படும் உடல் மாற்றங்களில் இந்த எலும்புகளும் சேதம் அடைய தொடங்கிவிடுகின்றன. இதனை நாம் நம் கண்களால் காண முடியாது. மிக மெதுவாக தேயத் தொடங்கும் எலும்புகள், பிற்காலத்தில் ஏற்படுத்தும் நோயின் தீவிரம் ஆளைக் கொடுமைப்படுத்தும் வலிமை உடையது.

முதுமையில் பொதுவாக நாற்பது வயதைத் தொடும் பொழுது மனித எலும்புகள் தனது வலுவை இழக்கத் தொடங்கிவிடுகின்றன. இதனை தான் மருத்துவர்கள் எலும்பு தேய்மானம் என்று பொதுவாக விளக்கம் அளிக்கிறார்கள். இது பொதுவாக பெரும்பாலும் பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களில் 40 வயதில் முதல் இந்த நோயின் தாக்கம் ஏற்படத் தொடங்கி அவர்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

எலும்புகளுக்குத் தேவையான முக்கியமான ஒன்று கல்சியம் என்ற தாது உப்பு. இந்த தாது உப்பை எலும்புகள் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டுள்ளன. இந்தக் குணம் பொதுவாக நாம் முதுமையை நெருங்கும் பொழுது மெதுவாக மாறியும் மறைந்து போய்விடுவதால் எலும்பு தேயமானம் வருகிறது. அதாவது முக்கியமாக பெண்களில் உதிரப்போக்கு நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கல்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.

இதனால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள் வருமாறு:

எலும்பு முறிவு, மூட்டு வலி, மூட்டு வாதம், கழுத்து எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு தேய்மானம், முதுகு வலி, உடல் சோர்வு, அசதி, முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல், நடையில் தளர்வு இதுபோன்ற பக்க விளைவுகளால் பெண்கள் தனது 40 வயது முதல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எல்லா நோய்களையும் நம்மால் குணப்படுத்துவதை விட எளிதாக தடுக்க முடியும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி