செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாஸாவின் கியூரியாசிட்டி இயந்திரம் முதல்
வர்ணப்படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது. கடந்த திங்கட்கிழமை வெற்றிகரமாக தரையிறங்கிய
இந்த இயந்திரம் செவ்வாயில் முழு நாளை கழித்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வர்ணப்
புகைப்படத்தை அனுப்பியுள்ளது.
எனினும் கியூரியாசிட்டி இயந்திரத்தின் கெமராவில் தூசு படித்திருப்பதால் வர்ண
புகைப்படம் தெளிவில்லாமல் உள்ளது. செவ்வாயின் கால் கிரட்டர் பல்லத்தாக்கில் வடக்கு
திசை மலைப் பகுதியின் பரந்தவெளியை இந்த புகைப்படம் காண்பிக்கிறது.
இந்த
புகைப்படத்தின் மூலம் கியூரியாசிட்டி இயந்திரத்தின் முக்கிய கருவியான அதி நவீன
தொழிநுட்பத்திலான கெமரா எந்த கோளாரும் இன்றி செயற்படுவதை உறுதி செய்ய முடிவதாக நாஸா
குறிப்பிட்டுள்ளது. இந்த கெமரா ஒரு மனித முடியை பல மடங்கு பெரிதாகக் காண்பிக்கக்
கூடிய அளவுக்கு நுணுக்கம் கொண்டதாகும்.
அணு சக்தி கொண்ட இந்த கியூரியாசிட்டி இயந்திரம் செவ்வாயில் அடுத்த இரண்டு
ஆண்டுகளுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆறு சக்கரங்களை கொண்ட இந்த இயந்திரம் பாதிப்பின்றி செயற்படுகிறதா என்பதை
நாஸா விஞ்ஞானிகள் தொடர்ந்து உறுதி செய்து வருகின்றனர். இதனை முழுமையாக உறுதிசெய்ய
ஒரு வாரமளவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தற்போதைய நிலையில் கியூரியாசிட்டி இயந்திரம் நல்ல நிலையிலேயே இருப்பதாக அதன்
செயற்பாட்டு முகாமையாளர் மைக்கல் வட்கின்ஸ் குறிப்பிட்டார்.