கிரீஸ் நாட்டவருக்கு மாத்திரம் தேசியவாத அரசியல் கட்சி உணவு விநியோகம்
கிரீஸ் நாட்டவருக்கு மாத்திரம் தேசியவாத
அரசியல் கட்சி உணவு விநியோகம்
கிரீஸ் நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியான கோல்டன் டவுன் கட்சி கிரீஸ் பிரஜைகளுக்கு
மாத்திரம் என கூறி உணவு நிவாரண பொருட்களை விநியோகித்துள்ளது. கிரீஸ் தலைநகர்
ஏதன்ஸின் பாராளுமன்றத்திற்கு அருகில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த இலவச
உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த உணவுப் பொருட்களை பெறுவோர் தாம் கிரீஸ் நாட்டு பிரஜை என்பதை உறுதிசெய்ய
அடையாள பத்திரங்களை சமர்ப்பிக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர்
வரிசையில் காத்துநின்று தாம் கிரீஸ் நாட்டு பிரஜை என்பதை உறுதிசெய்து இந்த உணவுப்
பொருட்களை பெற்றுள்ளனர். இதன்போது பாஸ்டா எனப்படும் உணவுப் பொதி, பால், கடலை மற்றும்
சமையல் எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் கிரீஸில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 23 வீதமாக
உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோல்டன் டவுன் கட்சி குடியேற்றவாசிகளுக்கு எதிராக தனது
அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது.
இந்த இலவச உணவு விநியோகம் குறித்து ராய்ட்டருக்கு கோல்டன் டவுன் கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டஸ்ட் பெப்பாஸ், ‘நாம் கிரீஸ் நாட்டவர். எனவே கிரீஸ்
நாட்டவருக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றார். ‘சட்டவிரோத
குடியேற்றவாசிகள் இங்கு வந்து சொகுசுகளை அனுபவிக்கிறார்கள். இது கிரீஸ்
மக்களுக்குத்தான் ஆபத்தானது’ என்றும் பெப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கோல்டன் டவுன் கட்சியின் இந்த செயற்பாடு அடல்ப் ஹிட்லரின் கொள்கைகளை
வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே ஏதன்ஸ் நகரில் ஆசிய குடியேற்ற வாசிகளுக்கு எதிராக அண்மைக் காலமாக
நடத்தப்படும் தாக்குதல் குறித்து கோல்டன் டவுன் கட்சி மீது தொடர்ச்சியாக
குற்றச்சாட்டு சுமத்தப்படு கின்றமை குறிப்பிடத்தக்கது. ‘இரவில் மக்களை
தாக்குகிறார்கள். பகலில் உண வளிக்கிறார்கள்’ என ஏதன்ஸ் நகர கவுன்ஸிலின் இடதுசாரி
உறுப்பினர் பெட்ரோஸ் கொன்ஸ்டன்டினியஸ் ஏ. பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கிரீஸில் அதிகரித்துவரும் நிதி நெருக்கடி காரணமாக கோல்டன் டவுன் கட்சியின்
செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. அந்த கட்சி ஜூன் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற
தேர்தலில் 18 ஆசனங்களை வென்றது.