ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,AUGUST, 03, 2012
வரு. 80 இல. 183
 

ரமழான் பண்புகள் ஆயுள் வரை தொடரும்

ரமழான் பண்புகள் ஆயுள் வரை தொடரும்

வாழ்க்கையில் அனைத்து துறைகளுக்கும் வழி காட்டக்கூடிய நெறிநூலாகிய சத்திய வேதமான அல்குர்ஆன் அருளப்பட்ட அருள் நிறைந்த புனித ரமழான் மாதத்தை நாம் இவ்வருடமும் அடைந்திருப்பது அல்லாஹ் நமக்களித்த மாபெரும் கிருபையாகும். பகல் பொழுதில் உண்ணாமலும் பருகாமலும் நோன்பிற்கான வெளிப்புற விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நோன்பு நோற்று அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணியும் நமக்கு வெறுமனே உண்ணாமலும் பருகாமலும் இருந்ததுதான் மிச்சம் என்ற நிலை ஏற்படாமல் நோன்பின் உள்நோக்கம் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

ரமழான் ஸதகாவின் மாதம். ஏழை எளியவர்களுக்கு உதவ சந்தர்ப்பமளிக்கும் சங்கையான மாதம். ஏனைய காலங்களைவிட ரமழானில் தர்மம் வழங்கும் நற்செயலை அதிகமாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ரமழானில், வீசும் காற்றைவிட வேகமாக ஈகை செய்பவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள். ரமழானில் வழங்கப்படும் தர்மமே சிறந்த தர்மம் என்றும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், அல்லாஹ்வே தர்மம் செய்தவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக என்று கூறுவார். மற்றவர், அல்லாஹ்வே (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக என்று கூறுவார் என்று நபி மொழி புகாரி 1442 இல் பதிவாகியிருப்பதால் தர்மம் செய்யாது பதுக்கி வைப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அழிவு வந்தடையும் என்று எச்சரிக்கிறது. அப்படியானால் தர்மம் செய்யும் பாக்கியம் சகலருக்கும் உண்டா? அல்லது அது செல்வந்தர்கள் தொடர்புடையதா என பலர் யோசிக்கலாம்.

தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்.என்று நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றபோது மக்கள், ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வதென்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அவர் தம் இரு கரங்களால் உழைத்து தாமும் பயனடைவார். தர்மம் செய்து பிறரையும் பயனடையச் செய்வார் என்று கூறினார்கள்.

அதற்கு மக்கள் அவருக்க உழைக்க உடலில் வலிமை இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யாது விட்டால் என்ன செய்வதென்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவட்டும் என்றார்கள். மக்கள் இதையும் அவர் செய்யாவிட்டால் என்று கேட்டார்கள் அதறகு அவர் நற்காரியங்களைச் செய்யும்படி பிறரை ஏவட்டும் என்றார்கள்.

இதையும் அவர் செய்யாவிட்டால் என்று மீண்டும் கேட்டதற்கு, நபி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள், அவர் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருக்கட்டும் அதுவே அவருக்கு தர்மம் ஆகும் என்றார்கள் புகாரி 6022.

தர்மம் என்பது பணத்தையும் பொருளையும் கொடுத்து பிறருக்கு உதவுவது மட்டுமே என்ற தவறான விளக்கத்தினை இந்த நபி மொழி அழகாக அகற்றிவிட்டது. இன்னும் தர்மம் செய்வது பொருளாதாரத்தின் மூலம் செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும் செய்யும் காரியமன்று என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது.

தன்னிடம் எது இருக்கிறதோ அதனை தேவையுடையவர்களுக்கு கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லையென்றால் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தார்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கமளிக்கிறது.

ஒருவரது தேவைகள் நிறைவேற உள்ளத்தால் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் தர்மம்தான். ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குதர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். புகாரி 55.

தன்னுடைய மனைவி மக்களுக்கு செலவு செய்வதில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது. அல்லது அவர்களை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்றுகூறி அவர்களை முறையாக பராமரிக்காமல் ஏழை எளியவர்களுக்கு உதவுமாறு இஸ்லாம் வலியுறுத்தவில்லை அன்றிருந்த அருமைத் தோழர்களின் மன நிலை இன்றுள்ளவர்களுக்கு சிறிதளவும் இல்லை என்பதை இப்படிப்பட்டோர் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவதுடன் அதைச் சம்பாதித்த கணவனுக்கும் நன்மை கிடைக்கும் புகாரி 1425, 2065.

தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக என்றும் அல்லாஹ்வின் தூதர் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பொன்மொழி புகாரி 1426ல் பதிவாகியுள்ளது.

ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நாட்டி அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்ற பொன்மொழி புகாரி 2320ல் பதிவாகியிருக்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி