ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST,03, 2012

Print

 
பத்ர் ஸஹாபாக்களின் தியாகம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிரதிபலிக்க வேண்டும்

பத்ர் ஸஹாபாக்களின் தியாகம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிரதிபலிக்க வேண்டும்

இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் விரோதிகளை இராணுவ ரீதியாக எதிர்த்துப் போராடி வெற்றிபெற்ற முதலாவது யுத்தம், “பத்ர் யுத்தம்” என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது.

நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் நபித்துவத்தை அடைந்தது முதல் பலவிதமான எதிர்ப்புக்களைச் சகித்து பதின் மூன்று ஆண்டுகள் சன்மார்க்கப் பிரசாரம் செய்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் அனுமதிப்படி தங்களின் ஸஹாபாக்களுடன் சொத்துக்களைத் துறந்து வீடுவாசல்களை இழந்து 300 மைல்களுக்கப்பால் உள்ள மதீனா மாநகரில் அமைதியாக வாழ்ந்த நபியவர்களை அமைதியாக இருக்கவிடாமல் பகைவர்கள் மீண்டும் தொல்லை கொடுத்தார்கள்.

இஸ்லாம் பூமியில் உயர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் தமது சொத்துக்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்ய முஸ்லிம்கள் பணிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக முஸ்லிம்களுக்கு சுவர்க்கம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் முன்வைக்கப்பட்டது.

இஸ்லாம் வாழ வேண்டுமா? அல்லது வீழவேண்டுமா? என்ற சத்தியத்துக்கும் அசத்தியத்துக்குமிடையில் நடைபெற்ற பத்ர் யுத்தம் சத்தியத்தை மேலோங்கச் செய்தது புனித பத்ர் போர்.

பத்ருப் போரில் அல்லாஹ் முஃமின்களுக்கு பல படிப்பினைகளை வைத்துள்ளான். அதில் முக்கியமானது இந்த உலகமே எதிர்த்தாலும் அல்லாஹ்வின் உதவி இல்லாமல் எவரும் வெற்றி பெற முடியாது என்பதை இப்போரின் மூலம் அல்லாஹ் உணர்த்தியுள்ளான். இந்த பத்ர் ஸஹாபாக்கள் தினம் எங்களுக்குப் போதிக்கும் விடயம் தான் அல்லாஹ்வுக்காக என்ற அசையாத உள்ளத்தின் உறுதியும், மனவலிமையும், ஈமானுமேயாகும். அல்லாஹ்வின் திருப்தி ஒன்றே மானிட வாழ்வுக்குப் போதுமானது.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுபவர்களை இறந்தவர்கள் என நீங்கள் கூற வேண்டாம். மாறாக அவர்கள் உயிருடனிருக்கிறார்கள். எனினும் நீங்கள் (அவர்களது உண்மை நிலையாதென்று) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள் (2:154) என்று அல்லாஹ் கூறுகின்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

webmanager@lakehouse.lk