ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST,03, 2012

Print

 
ஒபேசேகரபுர மத்ரஸாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்

ஒபேசேகரபுர மத்ரஸாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்

இராஜகிரிய, ஒபேசேகரபுரவிலுள்ள மத்ரஸாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அமல் வீரசேகர உறுதியளித்துள்ளார்.

ஒபேசேகரபுர மத்ரஸா விவகாரம் தொடர்பாக பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானாவின் பிரத்தியேகச் செயலாளர் நஜீப் மெளலானா ஆகியோர் நேற்றுக் காலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அவசரமாகச் சந்தித்த போதே மேற்கண்டவாறு அவர் உறுதியளித்திருக்கிறார்.

இதேநேரம் இந்த மத்ரஸா விவகாரம் தொடர்பாக பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், மேல் மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் நஜீப் மெளலானா ஆகியோர் பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்கக்கோனுடனும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்காவுடனும் தொடர்பு கொண்டு பேசினர்.

இதன் பின்பே வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை இவர்கள் சந்தித்துள்ளனர். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் மேயர் ஜானக ரணவக்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அச்சமயம் மேயர் ரணவக்க ஒபேசேகரபுர மத்ரஸாவில் முஸ்லிம்கள் தம் சமயக் கடமைகளில் வழமைபோன்று ஈடுபட வேண்டும். அதற்கு இடையூறு செய்ய இடமளிக்க முடியாது.

அம்மத்ரஸாவில் முஸ்லிம்கள் தங்கள் சமயக் கடமைகளை வழமை போன்று மேற்கொள்ளத் தேவையான ஒத்துழைப்புகளை நாம் நல்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மத்ரஸா பல வருடங்களுக்கு முன்னர் மர்ஹும் றூஹுல் ஹக் மெளலவியால் ஆரம்பிக் கப்பட்டதாகும்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச் எம். அஸ்வர் கூறு கையில்:- அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கு தீய சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் வெளிப்பாடே இது. இவ்வாறான நடவடிக்கையின் ஊடாக இந்த நாட்டில் மனித உரிமையோ, மத சுதந்திரமோ கிடையாது என உலகிற் குக் காட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் இச்சதியாளர்களின் முயற்சி வெற்றிய ளிக்கப்போவதில்லை.

இந்த சதி நடவடிக்கைகளின் பின்னணியில் சியோனிஸவாதிகளும் ஐ. தே. க. வில் சிலரும் இருப்பதாகவே தெரிகின்றது. இச்செயற்பாடுகள் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் சிலர் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரம் அவர்களது அரசியல் வங்குரோத்து நிலையையே வெளிப்ப டுத்துகின்றது.

அவர்களது வங்குரோத்து அரசியல் பிரசாரத்தை நம்பி அவர்களுக்கு கிழக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கமாட்டார்கள். கிழக்கு முஸ் லிம்கள் உட்பட முழு நாட்டு மக்களும் அச்சம், பீதியின்றி சுதந்திரமான வாழக்கூடிய சூழலை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கமே பெற்றுக் கொடுத்தது. இதனை அவர்கள் மறக்கமாட்டார்கள் என்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

webmanager@lakehouse.lk