தெஹியோவிட்ட ஐ. தே. க. முஸ்லிம் ஆதரவாளர்கள் ஐ.ம.சு.முவில் இணைவு
தெஹியோவிட்ட ஐ. தே. க. முஸ்லிம்
ஆதரவாளர்கள் ஐ.ம.சு.முவில் இணைவு
காவத்தை தினகரன் விசேட நிருபர்
சப்ரகமுவ மாகாணத்தின் ருவான்வெல்ல தேர்தல் தொகுதியின் தெஹியோவிட்ட பிரதேச சபையின்
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எம். ஏ. எம். பாரூக் உட்பட 100 பேர் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டனர்.
நாப்பாவெல பிரதேசத்தில் முதலமைச்சர் வேட்பாளர் மஹிபால ஹேரத்திற்கு ஆதரவு வழங்கும்
கூட்டம் நேற்று முன்தினம் (01) இடம்பெற்றபோது, தெஹியோவிட்ட பிரதேச சபையின் ஐக்கிய
தேசிய கட்சி உறுப்பினர் நாப்பாவெல எம். ஏ. எம். பாரூக் உட்பட 100 பேரும் முதலமைச்சர்
வேட் பாளர் மஹிபால ஹேரத் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து
கொண்டனர். இவர்கள் 100 பேரும் நாப்பாவெல பிரதேச முஸ்லிம் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.
இதனையடுத்து இவ் உறுப்பினர்கள் நாப்பாவெல அல்பவுஸ் முஸ்லிம் பள்ளிவாசலில் விசேட
நோன்பு திறக்கும் நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் முதலமைச்சர்
வேட்பாளர் மஹிபால ஹேரத்தும் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய சப்ரகமுவ மாகாண
முதலமைச்சர் வேட்பாளர் மஹிபால ஹேரத், முகம்மது நபிகள் நாயகம் அவர்கள் உலகத்திற்கே
சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
முஸ்லிம் மக்களுக்காக பாடுபட்ட ஒரு தலைவர். அவர் முஸ்லிம் மக்களின் தேவைகளை அறிந்து
சேவையாற்றி வருகின்றார். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் மக்கள் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரித்து ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவார்கள்
என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. முஸ்லிம் மக்களின் ஆதரவு ஐ.ம.சு. முன்னணிக்கு
மட்டுமே என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மேற்படி நாப்பாவெல அல் பவுஸ் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு பத்து இலட்சம் ரூபா நிதி
வழங்குவதற்கு முதலமைச்சர் வேட்பாளர் மஹிபால ஹேரத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஐ. தே. கட்சியில் இருந்து ஐ. ம. சு. முன்னணியில் இணைந்துகொண்ட தெஹியோவிட்ட பிரதேச
சபை உறுப்பினர் நாப்பாவெல எம். ஏ. எம். பாரூக் உரையாற்றுகையில் கூறியதாவது, எமது
நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன மொழி கட்சி பேதங்களை மறந்து அனைவருக்கும்
சமமான முறையில் சேவையாற்றி வருகின்றார். எமது நாட்டை பல விதத்திலும் அபிவிருத்தி
செய்து வருகின்றார். அப்படியான ஒரு சிறந்த தலைவருக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டும்
என்றார்.