வரட்சியை காரணம் காட்டி தேர்தலில் விவசாயிகளை ஏமாற்ற ஐ.தே.க முயற்சி
வரட்சியை காரணம் காட்டி தேர்தலில்
விவசாயிகளை ஏமாற்ற ஐ.தே.க முயற்சி
* பாமர மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க ரணில், ஜே.வி.பி முதலைக் கண்ணீர்
* முடிந்தால், ஐ.தே.க ஆட்சியில் முன்னெடுத்த விவசாயத் திட்டங்களை பகிரங்கமாகக்
கூறட்டும்
எம். எஸ். பாஹிம்
வரட்சியைக் காரணம் காட்டி தேர்தலில் வெற்றி பெற கனவு காணும் ஐ. தே. க. விவசாயிகள்
குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் 2002 – 2004
ஆட்சியில் விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டத்தை கூறுமாறு சவால்
விடுவதாக சு. க. செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
1994 இல் முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வுடனும் எங்களுட னும் ரணில்
விக்கிரமசிங்கவுக்கு விசேட தொடர்பு எதுவும் இருக்கவில்லை. ஐ. தே. க. ஜனாதிபதி
வேட்பாளர் காமினி திசாநாயக்கவை தோற்கடிப்பதற்காகவே அவர் நெருக்கமாக இருந்ததாகவும்
அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு மகாவலி கேந்திர
நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது:-
ரணில் விக்கிரமசிங்க 1994 ஜனாதிபதி தேர்தலின் போது எம்முடன் தொடர்பு வைத்திருந்தது
தொடர்பில் நிரூபிக்க சாட்சியம் தேவையில்லை. அவரிடமே அதனை கேட்டுத் தெரியலாம்.
மகாவலி கிராமமொன்றில் இடம் பெற்ற மக்களுடனான சந்திப்பின் போது தான் நான் இந்த தகவலை
முதலில் வெளியிட்டேன். தமது பிரதேசத்துக்கு அமைச்சர் நவீன் திசாநாயக்கவை
அனுப்புமாறும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் அந்த மக்கள் கோரினர். அந்த சமயத்திலே
நான் இது பற்றி கூறினேன்.
ஐ. தே. கவுக்குள் தற்பொழுது பிளவு ஏற்பட்டுள்ளது. எமக்கு ரணில் விக்கிரமசிங்கவுடனோ,
பிரதித் தலைவர் சஜித்துடனோ எதுவித தொடர்பும் கிடையாது. அது தொடர்பான குற்றச் சாட்டை
ஏற்க முடியாது. நாட்டின் விவசாயத்துறையை நாசப்படுத்திய ஐ. தே. க. வும் ஜே. வி.
பியும் இன்று விவசாயிகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.
ஜே. வி. பி. நெற்
களஞ்சியங்களை தீ வைத்து அழித்ததோடு வயல்களுக்கு சென்று விவசாயிகளையும் கொன்றது. ஐ.
தே. க. வின் 1977 – 94 காலத்திலும் 2002 – 4 காலப் பகுதியிலும் பசளை நிவாரணம்
நிறுத்தப்பட்டதோடு, நெற் களஞ்சியங்கள் மூடப்பட்டன. அவை நெருக்கமானவர்களுக்கு சொற்ப
விலைக்கு வழங்கப்பட்டன. 1977 திறந்த பொருளாதாரத்தின் மூலமும் விவசாயத்துறை
நாசமடைந்தது.
ஆனால் 2005 முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் விவசாயத்துறை மறுமலர்ச்சி
பெற்றது. டி. எஸ். சேனாநாயக்கவின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே
விவசாயத்துறையை மேம்படுத்தியது.
பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
வரட்சியை காட்டி தேர்தலில் வெல்ல ஐ. தே. க. வும் ஜே. வி. பியும் கனவு காண்கின்றன.
மீண்டும் விவசாய ஓய்வூதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனூடாக விவசாயத்துறையை
பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.